கன்னியாகுமரி நாகர்கோவில் அருகே வடக்கு கள்ளக்குறிச்சி பகுதியைச் சேர்ந்தவர் பட்டதாரி சுபா. இவர் ஆசிரியர் பயிற்சி படித்து வந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் மாயமானார்.
இந்நிலையில், சுபா குமாரகோவில் பகுதியைச் சேர்ந்த விக்னேஷ் என்ற இளைஞருடன் காதல் திருமணம் செய்ததாக கூறி தக்கலை காவல் நிலையத்தில் சரணடைந்தனர்.
இதனைத் தொடர்ந்து, தங்களை ஆணவக்கொலை செய்யும் நோக்கோடு சுபாவின் பெற்றோர் தேடி வருவதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் காதல் தம்பதியினர் புகார் அளித்தனர். இந்நிலையில் சுபாவின் பெற்றோர் நேற்று (ஜூலை9) நாகர்கோவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்தனர்.
அந்த மனுவில், "எங்கள் மகளை விக்னேஷ் ஏமாற்றி கடத்திச் சென்றுவிட்டார். விக்னேஷ் ஏற்கனவே பல பெண்களை காதலித்து எமாற்றியுள்ளார். குமாரகோவில் பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணை ஏமாற்றி திருமணம் செய்ததோடு, அந்த பெண்ணில் சாவுக்கும் காரணமானவர்.
இப்போது, எனது மகளையும் காதலித்து ஏமாற்றியுள்ளார். இது குறித்து காவல் நிலையத்தில் மனு கொடுத்தும் காவல் துறையினரும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவே எங்களது மகளை மீட்டு தரவேண்டும்" இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: காதல் திருமணம் செய்த பெண்ணிடமிருந்து நகை பறிப்பு!