அரசு அறிவித்த நிவாரணம் அனைவருக்கும் வழங்கக்கோரி சிஐடியு இந்தியத் தொழிற்சங்க மையம் கடலூர் மாவட்ட தலைவர் பழனிவேல், மாவட்ட செயலாளர் கருப்பையா தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கடலூர் தொழிலாளர் நல அலுவலகம் முன்பு திரண்டனர்.
தகவல் அறிந்து கடலூர் துணை காவல் கண்காணிப்பாளர் சாந்தி தலைமையில் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அங்கு திரண்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். பின்னர் ஐந்து பேர் மட்டுமே அலுவலகத்திற்குச் சென்று கோரிக்கை மனு அளிக்க அனுமதிக்கப்பட்டனர். மேலும் மற்றவர்கள் அனைவரும் கலைந்து செல்லும்படி கூறினார்.
இதுகுறித்து மாவட்ட செயலாளர் கருப்பையா கூறியதாவது,
தமிழ்நாட்டில் கரோனா பரவலை தடுக்கும் பொருட்டு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் தொழிலாளர் நல வாரியத்தில் பதிவு செய்தவர்களுக்கு ரூபாய் 2000 நிவாரணம் வழங்கப்படும் என முதலமைச்சர் அறிவித்திருந்தார். இதில் 73 லட்சம் பேர் நலவாரியத்தில் பதிவு செய்துள்ளனர். ஆனால் 28 லட்சம் பேர் மட்டுமே பட்டியலில் இடம்பெற்றுள்ளனர். மீதமுள்ள 45 லட்சம் உறுப்பினர்கள் புதுப்பிக்கவில்லை ஆதார் கார்டு கிடைக்கவில்லை எனக் கூறி அவர்களுக்கு நிவாரணம் வழங்கப்பட மாட்டாது என அரசு அலுவலர்கள் தெரிவித்துள்ளனர். இது கண்டனத்துக்குரியதாகும்.
கடலூரை பொறுத்தவரையில் ஒரு லட்சத்து 80 ஆயிரம் பேர் நலவாரியத்தில் பதிவு செய்துள்ளனர். ஆனால் ஒரு லட்சத்து 11 ஆயிரம் பேருக்கு மட்டுமே உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 69 ஆயிரம் பேருக்கு உறுப்பினர் அட்டை புதுப்பிக்கவில்லை ஆதார் கார்டு இணைக்கவில்லை என வழக்கம்போல் கூறி நிவாரணத் தொகை இதுவரை வழங்கப்படவில்லை.
நிவாரண தொகை உறுப்பினர் வங்கி கணக்கு அனுப்பும்போது வங்கிகள் மினிமம் பேலன்ஸ் இல்லை எனக்கூறி பிடித்தம் செய்கின்றனர். இந்த பேரிடர் காலத்திலும் வங்கிகள் பிடித்தம் செய்து கொள்வது சரியானது அல்ல, கொடுமையான செயலாகும்.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியரிடம் முறையிட்டும்கூட இதே நிலை நீடிக்கிறது. கடலூர் மாவட்டத்தில் நலவாரியத்தின் மூலம் சுமார் 3,000 பேர் ஆயிரம் ரூபாய் ஓய்வூதியம் பெற்று வருகின்றனர். ஆனால் கடந்த ஒன்பது மாதங்களாக ஓய்வூதியம் வழங்கப்படவில்லை. ஊரடங்கு காலத்தில் எவ்வித வருமானமின்றி சிரமப்படுகின்றனர். எனவே நிலுவையில் உள்ள ஒன்பது மாத ஓய்வு ஊதியத் தொகையை வழங்கிட வேண்டும்”
இவ்வாறு அவர் கூறினார்.