இது குறித்து அறப்போர் இயக்க ஒருங்கிணைப்பாளர் ஜெயராமன், மாநிலக் குழு உறுப்பினர் தீபா ஆகியோர் கூட்டாக அளித்த பேட்டியில்,
‘அறப்போர் இயக்கம் சார்பில் 'Know your candidates' என்னும் புதிய கைப்பேசி செயலி வெளியிடப்பட்டுள்ளது. இந்த செயலி மூலம் மக்களவைத் தேர்தலில் போட்டியிட உள்ள வேட்பாளர்களின் பிரமாணப் பத்திரத்தில் உள்ள அவர்களது பெயர், ஊர் கல்வித்தகுதி, குற்றப் பின்னணி ஆகியவை குறித்து இதில் அறிந்து கொள்ளலாம். தமிழ்நாட்டிலேயே 40 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களின் விவரங்களை நாம் தெரிந்து கொள்ள முடியும்.
கூகுள் பிளே ஸ்டோரில் இதைத் தரவிறக்கம் செய்து கொள்ளலாம். 2002ஆம் ஆண்டு முதல் பிரமாணப் பத்திரத்தைத் தேர்தல் அலுவலர் மூலம் பெற்று வந்தோம். ஆனால் தற்போது அனைத்திற்கும் கைப்பேசி செயலி மூலம் வெளியிட்டுள்ளோம். தமிழ், ஆங்கிலத்தில் கிடைக்கிறது.
பிரமாணப்பத்திரத்தில் தரப்பட்டுள்ள தகவல்களைக் கொண்டு வரும் நாட்களில் அனைத்து தொகுதி வேட்பாளர்கள் பற்றிய 5 நிமிட காணொளி வெளியிட உள்ளோம். இதன் மூலம் அனைவரும் தொகுதியைப் பற்றி எளிதில் அறிந்து கொள்ளலாம்.
வேட்பாளர்கள் உண்மையான தகவலைத்தான் கூறியுள்ளனர் என்று உறுதியாகக் கூற முடியாது. ஆனால் பிரமாணப் பத்திரத்தில் பல வேட்பாளர்கள் முரண்பாடாகக் கணக்கினை காட்டியுள்ளனர். அவர்களைத் தேர்தல் ஆணையம் தகுதி நீக்கம் செய்யவில்லை. ஏற்கனவே துணை முதலமைச்சர் ஓபிஎஸ் மகன் பிரமாணப் பத்திரத்தில் தவறாகத் தகவல் கொடுத்ததைச் சுட்டிக்காட்டி புகார் அளித்துள்ளோம்’ என்று கூறினார்.