சென்னையில், மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது அவர் பேசுகையில், "சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் புதிய முயற்சியாக கரோனா தொற்று என சந்தேகப்படும் நபர்கள் வார்டு 120 படுக்கைகளுடன் தொடங்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு முழுவதும் ஏற்கனவே ஒரு லட்சத்து 42 ஆயிரத்து படுக்கைகளுடன் அனைத்து மாவட்டங்களிலும் கரோனா சிகிச்சை அளிக்க மருத்துவமனைகள், தனிமப்படுத்தும் மையம் போன்றவற்றில் ஏற்படுத்தியுள்ளோம்.
சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் ஏற்கனவே கரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க தனி வார்டு தொடங்கப்பட்டுள்ளது. அதற்கு மக்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
கரோனா பரிசோதனை ஆர்டிபிசிஆர் மூலம் செய்யும்போது நெகட்டிவ் வந்தாலும், தொற்றினால் அவர்களுக்கு நுரையீரல் பாதிப்பு ஏற்பட்டு மூச்சுத்திணறல் ஏற்படும் சூழ்நிலை இருக்கிறது.
அவர்களுக்காக புதிதாக கரோனோ சந்தேகம் உள்ளதா என்பதற்கான வார்டு உருவாக்கியுள்ளோம். அவர்களையும் கரோனா நோயாளிகள் போல் சிகிச்சை அளிக்க வேண்டியுள்ளது.
எக்காரணத்தாலும் ஒரு நோயாளியும் உயிரிழக்கக் கூடாது என்பதால்தான் இதுபோன்ற பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம்.
கரோனா காலத்திலும் மருத்துவர்கள் சிறப்பாக பணிபுரிகின்றனர். ஆந்திராவிலிருந்து வந்த 8 வயது குழந்தைக்கு பிளாஸ்டிக் சர்ஜரி மருத்துவர்கள் சிறப்பாக செய்துள்ளனர்.
கரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை எல்லா மாவட்டங்களிலும் 10 விழுக்காடு குறைவாக வந்துள்ளது.
பொது முடக்கத்தை முழுவதுமாக விலக்கி பேருந்து சேவைகள் தொடங்கப்பட்டுள்ளது. வணிக வளாகங்களும் செயல்பட ஆரம்பித்துள்ளன. இது அனைவரும் விழிப்புணர்வுடன் இருப்பதை காண்பிக்கிறது.
தமிழ்நாட்டின் அருகில் உள்ள ஆந்திரா, கேரளா, கர்நாடகா போன்ற மாநிலங்களில் நோய் இல்லாதவர்கள் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
மக்கள் மேலும் கூடுதலாக கவனத்துடன் இருந்தால் படிப்படியாக எண்ணிக்கை குறைக்க முடியும்.
பொது முடக்கத்தில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளதால் தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருகிறதா என்பதே இரண்டு வாரங்கள் கடந்தால்தான் தெரியும். இருந்தாலும் தொடர்ந்து வழக்கம் போல் அதிக அளவில் பரிசோதனை செய்து வருகிறோம்.
மேலும் கரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவரையும், அவருடன் தொடர்புடையவர்களின் தொடர்ந்து கண்காணித்து பரிசோதனை செய்து வருகிறோம். இது நமக்கு நம்பிக்கை தரும் வகையில் உள்ளது.
வளர்ந்த நாடுகளில் இல்லாத வகையில் தமிழ்நாட்டில் அரசு மருத்துவமனைகளில் படுக்கை வசதிகள் ஏற்படுத்தி உள்ளோம்.
அனைத்து மருத்துவமனைகளிலும் 50 விழுக்காடு ஆக்சிஜன் படுக்கை வசதி ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
அரசு உயிரிழப்புகளை குறைப்பதற்கு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதிலும் பணியாளர்களின் நலன் மிகவும் முக்கியம். எனவே அவர்களுக்கு முன்னுரிமை அளித்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
அடுத்த வாரம் முதல் தமிழ்நாட்டில் கரோனா தொற்று அதிகரித்து அரசு மருத்துவமனைகளில் படுக்கைகள் பற்றாக்குறை ஆக வேண்டும் என்பது திமுக எம்.பி செந்தில்குமாரின் ஆசையாக உள்ளது. அது நிறைவேறாது. அரசு எந்த சூழ்நிலையும் எதிர் கொள்வதற்கு தயாராக உள்ளது.
எனவே மக்கள் தொடர்ந்து பயமின்றி, பதற்றமின்றி பாதுகாப்புடன் முகக்கவசம் அணிந்து இருக்க வேண்டும்" எனத் தெரிவித்தார்.