மதுரை மாவட்டம் திருமங்கலம் பகுதியில் உள்ள அரசு பயணியர் விடுதியில் தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர் நலவாரியத்தில் பதிவுபெற்ற கட்டுமான தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கலந்துகொண்டு 100க்கும் மேற்பட்ட கட்டுமான தொழிலாளர்களுக்கு தலைக்கவசம் உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்கள் அடங்கிய தொகுப்பினை வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், "பலமுறை தொழிற்சங்க நலவாரியங்களில் பதிவு செய்வதற்கான அறிவுரைகளைக் கூறிவருகிறோம். பதிவு செய்யாத தொழிலாளர்களுக்கும் புதிதாக பதிவு செய்வதற்கான வாய்ப்பை தமிழ்நாடு முதலமைச்சர் ஏற்படுத்தித் தந்துள்ளார்.
இந்த வாய்ப்பினை தவறாது அனைத்து தொழிலாளர்களும் பயன்படுத்தி நல வாரியங்களில் பதிவுசெய்து கொள்ள வேண்டும். ஆன்லைன் மூலமாக நலவாரியத்தில் பதிவுசெய்யக் கூடிய வாய்ப்பு தற்போது ஏற்படுத்தப்பட்டுள்ளது.
அரசு அறிவித்துள்ள தளர்வுகளை அத்தியாவசியத் தேவைகளுக்கு மட்டுமே மக்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். தேவையின்றி மக்கள் வெளியே வரும்போது பலவிதமான சிரமங்களைச் சந்திக்க வேண்டியிருக்கும்" என்றார்.