தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே வேலாயுதபுரம் ஈ.வே.ஏ.வள்ளிமுத்து நாடார் தொடக்க மற்றும் உயர் நிலைப்பள்ளியில் படிக்கும் 500 மாணவ-மாணவிகளின் குடும்பத்துக்கு அத்தியாவசியப் பொருள்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிககிழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தலைமை வகித்தார். அமைச்சர் கடம்பூர் ராஜூ கலந்துகொண்டு மாணவ-மாணவிகளின் குடும்பத்துக்கு அத்தியாவசியப் பொருள்களை வழங்கினார். தொடர்ந்து கோவில்பட்டி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் கரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக சிகிச்சைப் பெற்று குணமடைந்த 3 பேரை வழியனுப்பி வைக்கும் நிகழ்ச்சி நடந்தது.
அவர்களுக்குப் பழங்கள், நோய் எதிர்ப்பு சக்தியை அளிக்கும் ஹோமியோ, சித்த மருந்துகளை அமைச்சர் கடம்பூர் ராஜூ வழங்கினார். மேலும், மருத்துவர்களின் அறிவுரைகளைப் பின்பற்றும்படி அறிவுறுத்தினார்.
தொடர்ந்து கோவில்பட்டி கதிரேசன் கோயில் சாலையில் நடைபெற்ற தார் சாலையை அமைக்கும் பணிகளைப் பார்வையிட்டார். இந்நிகழ்ச்சியில் கோட்டாட்சியர் விஜயா, வட்டாட்சியர் மணிகண்டன், சுகாதாரத் துறை துணை இயக்குநர் அனிதா மலர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கூறியதாவது, "தமிழ்நாடு அரசு எடுத்துவரும் நடவடிக்கைகளை அனைவரும் பாராட்டுகின்றனர். எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் மு.க.ஸ்டாலின் ஆலோசனைகள் வழங்கலாம்.
அவர் கடந்த சட்டப்பேரவைக் கூட்டம் நடந்து கொண்டிருந்தபோது அதனை ஒத்திவைக்க சொன்னார்.
அதற்கு சட்டப்பேரவை என்பது மக்களுடைய பிரதிநிதிகள் தான். நாம் இங்கு கூடுவது மக்களின் பிரச்னைகள் குறித்து பேசுவதற்காக தான். மக்களுக்கு பாதிப்பு என்று வரும்போது மக்கள் பிரதிநிதிகளான, நாம் அதிலிருந்து பின் வாங்கக் கூடாது. எனவே சட்டப்பேரவை கூட்டம் நடந்து கொண்டு இருக்கிறது என்ற கருத்தை தமிழ்நாடு முதலமைச்சர் தெரிவித்தார்.
ஆனால், அந்த நேரத்திலும்கூட, சட்டப்பேரவையை ஒத்திவைத்துவிட்டு, நாம் பாதுகாப்பாக செல்ல வேண்டுமென சொன்னவர், எதிர்க்கட்சித் தலைவர்.
மத்திய அரசு மற்றும் ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதலின்படி, அந்தந்த மாவட்ட நிர்வாகம் மூலமாக அப்பகுதிகளில் உள்ள நிதி நிறுவனங்களுக்கு ஊரடங்கு காலத்தில் தவணைத்தொகையை கட்ட வற்புறுத்தக் கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக யாராவது வந்து புகார் கொடுத்தால், கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும்" எனத் தெரிவித்தார்.
தொடர்ந்து சசிகலா விடுதலையாகி வந்தால் அதிமுகவில் சில மாற்றங்கள் ஏற்படுமா என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு அவர், "அதைப் பற்றி யோசிக்க நேரமில்லை. கரோனா வைரஸால் மக்கள் பாதிக்கப்பட்ட நேரத்தில் அரசியல் சம்பந்தப்பட்ட கேள்விகளுக்கு இடமில்லை. அந்த சிந்தனையே அதிமுக அரசுக்கு இல்லை" என்றார்.