12ஆவது ஐபிஎல் தொடரில், மும்பை இந்தியன்ஸ் - சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையிலான முதல் தகுதிச் சுற்றுப் போட்டி, சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. இதில், டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி 20 ஓவர்களில் நான்கு விக்கெட்டுகள் இழப்புக்கு 131 ரன்களை எடுத்தது. தோனி 37 ரன்களுடனும், ராயுடு 42 ரன்களுடனும் களத்தில் ஆட்டமிழக்காமல் இருந்தனர். மும்பை அணி தரப்பில் ராகுல் சஹார் இரண்டு, குருணல் பாண்டியா, ஜெயந்த் யாதவ் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை எடுத்தனர்.
இதைத்தொடர்ந்து, 132 ரன் இலக்குடன் பேட்டிங் செய்த மும்பை அணி, சூர்யகுமார் யாதவின் பொறுப்பான பேட்டிங்கால் 18.3 ஓவர்களில் நான்கு விக்கெட்டுகளை இழந்து 132 ரன்களை எட்டியது. இதன் மூலம், மும்பை அணி நான்கு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று, ஐந்தாவது முறையாக இறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளது. இப்போட்டியில் 54 பந்துகளை எதிர்கொண்ட சூர்யகுமார் யாதவ் 10 பவுண்டரிகள் என 71 ரன்கள் விளாசி இறுதிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். சென்னை அணி தரப்பில், இம்ரான் தாஹிர் இரண்டு, ஹர்பஜன் சிங், தீபக் சஹார் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை எடுத்தனர்.
நாளை நடைபெறவிருக்கும் டெல்லி - ஹைதராபாத் அணிகளுக்கு இடையிலான எலிமினேட்டர் போட்டியில் வெற்றிபெறும் அணியுடன் சென்னை அணி இரண்டாவது தகுதிச் சுற்றுப் போட்டியில் மோதும். அதில், வெற்றிபெறும் பட்சத்தில் மீண்டும் சென்னை இறுதிச் சுற்றில் மும்பை அணியை எதிர்கொள்ளும். இந்தத் தொடரில் சென்னை அணி, மும்பை அணியிடம் தொடர்ந்து மூன்றாவது தோல்வியை பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.