அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வு மையத்தினால், செவ்வாய் கிரகத்திற்கு இந்த மாதம் ஏவப்படவுள்ள விண்கலத்தை அருகில் இருந்து காணும் வாய்ப்பை வர்ஜீனியாவைச் சேர்ந்த பள்ளி மாணவன் அலெக்ஸ் மாதர் (13) பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இளந்தளிர்களிடையே விண்வெளி ஆய்வு குறித்த கனவை விதைக்கும் விதமாக செவ்வாய் கிரகத்திற்கு நாசா அனுப்பும் விண்கலத்திற்குப் பெயர் வைப்பது தொடர்பாக, அமெரிக்க அரசு பள்ளி மாணவர்களிடம் போட்டி ஒன்றை வைத்தது. இதன்மூலம் வெற்றிபெற்ற மாணவர் அளிக்கும் பரிந்துரையை ஏற்று ரோவர் விண்கலத்திற்குப் பெயர் வைப்பது மற்றும் அந்த விண்கலத்தை அருகிலிருந்து பார்க்கும் வாய்ப்பை வெற்றி பெற்ற மாணவருக்குத் தருவது உள்ளிட்ட சலுகைகளை நாசா அறிவித்திருந்தது.
அந்தப் போட்டியில் 28,000 மாணவர்கள் கலந்துகொண்டனர். அதில், 155 பேர் அரையிறுதிக்குத் தேர்வு செய்யப்பட்டனர். இறுதிச் சுற்றுக்கு ஒன்பது போட்டியாளர்கள் தேர்வு செய்யப்பட்ட நிலையில், அவர்களில் ஒருவரை வெற்றியாளராக அறிவிக்க, ஆன்லைனில் வாக்களிக்க பொதுமக்களுக்கு நாசா அழைப்பு கொடுத்தது.
போட்டியின் முடிவில் வெற்றிப்பெற்ற வர்ஜீனியாவைச் சேர்ந்த பள்ளி மாணவன் அலெக்ஸ் மாதர் சூட்டிய 'பெர்சிவியரன்ஸ்'(Perseverance) அதாவது 'விடாமுயற்சி' என்ற பெயர், ரோவர் விண்கலத்திற்கு வைக்கப்பட்டது.
நாசாவின் போட்டியில் வெற்றி பெற்ற அலெக்ஸ் பேசும்போது, 'விடாமுயற்சி என்பது அமெரிக்காவின் விடாமுயற்சி என்பதைத் தாண்டி, மனித குலத்தின் முயற்சியைக் குறிக்கும்’ என்று குறிப்பிட்டார்.
இந்த விண்கலம் செவ்வாய் கிரகத்தில் 687 நாள்கள் தங்கி இருந்து, அக்கிரகத்தின் தொன்மை, உயிர்கள் வாழ்வதற்கான சாத்தியக்கூறுகள் போன்ற தகவல்களை சேகரித்து பாறை, மண், காற்று ஆகியவற்றின் மாதிரிகளையும் கொண்டுவரும் என்றும் நாசா அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.