உலகளாவிய பெருந்தொற்று நோயான கோவிட்-19 பாதிப்பு இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் வேகமாக பரவிவருகிறது. குறிப்பாக, தமிழ்நாட்டில் மூன்றாம் கட்ட பரவலை அடையும் நிலையில் அதன் தாக்கம் தீவிரமடைந்து வருகிறது. கரோனா பரவலைக் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்க அமல்படுத்தப்பட்டிருந்த ஊரடங்கில் தளர்வளிக்கப்பட்டதை அடுத்து பல்வேறு மாவட்டங்களில் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
சென்னை உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் அமல்படுத்தப்பட்ட பொதுமுடக்கம் காரணமாக, மக்கள் அவரவர் சொந்த ஊர்களுக்கு திரும்புவதால் பரவல் அதிகரிக்க வாய்ப்புகள் ஏற்பட்டுள்ளன. இதைக் கட்டுப்படுத்த தமிழ்நாடு முழுவதும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகங்கள் முன்னெடுத்து வருகின்றன.
அதன் ஒரு பகுதியாக, தருமபுரியை அடுத்துள்ள அரூர் பேரூராட்சியில் நகர்ப்பகுதி முழுவதும் செயல்பட்டுவந்த இறைச்சிக் கடைகள் அனைத்தும், அரசு ஆண்கள் மேல் நிலைப்பள்ளி வளாகத்தில் உள்ள விளையாட்டு அரங்கத்திற்கு மாற்றப்பட்டுள்ளன. இறைச்சிக் கடைகளுக்கு வரும் மக்களுக்கு நுழைவாயிலில் சோப்பில் கைகளை கழுவ ஏற்படும் செய்யப்பட்டுள்ளது.
மேலும், தகுந்த இடைவெளியை பின்பற்ற பேரூராட்சி நிர்வாகம் புது விதமாக சைக்கிள் டயர்கள் வைத்து இடைவெளி ஏற்படுத்தியுள்ளது. இறைச்சி வாங்க வரும் பொதுமக்கள் தகுந்த இடைவெளியில் வைக்கப்பட்டுள்ள டயர்களுக்குள் வரிசையில் நின்று இறைச்சி வாங்கிச் செல்கின்றனர். சந்தை அமைக்கப்பட்டுள்ள அந்த இடத்தை சார் ஆட்சியர் மு.பிரதாப் இன்று நேரில் ஆய்வு செய்து மக்களிடம் குறைகளைக் கேட்டறிந்தார்.
இறைச்சிக் கடைகளில் பிளாஸ்டிக் கவர்களை பயன்படுத்த வேண்டாமென சார் ஆட்சியர் அறிவுறுத்தியதை அடுத்து தற்போது பெரும்பாலான கடைகளில் வாழை இலைகளில் கட்டி இறைச்சி விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. குறிப்பாக, எல்லையோர மாவட்டமான தருமபுரியில் 44 சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு, மாவட்ட எல்லைகளுக்குள் நுழைபவர்களுக்கு கரோனா கண்டறிதல் சோதனை செய்யப்படுகிறது.
இதற்கான வசதிகள் செட்டிக்கரையில் உள்ள தருமபுரி அரசு பொறியியல் கல்லூரி வளாகம், தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை ஆகிய இரு இடங்களில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. கரோனா வைரஸால் தரும்புரியில் இதுவரை 48 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் 19 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பி உள்ளதாகவும் தமிழ்நாடு சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.