மக்காத நெகிழிப் பொருள்களான ஒற்றைப் பயன்பாடு நெகிழிகள், நெகிழிப் பைகள், நெகிழிக் குவளைகள், நெகிழித் தட்டுகள், தண்ணீர் பாக்கெட்டுகள், நெகிழி உறிஞ்சு குழல்கள் (ஸ்ட்ரா), நெகிழிக் கைப்பைகள் உள்ளிட்ட பொருள்களை விற்பனை செய்தல், பயன்படுத்துதல், சேமித்துவைத்தல் தடைசெய்யப்படுவதாகத் தமிழ்நாடு அரசு 2018ஆம் ஆண்டு அரசாணை பிறப்பித்தது. இந்தத் தடையானது 2019 ஜனவரி ஒன்றாம் தேதியிலிருந்து அமலில் உள்ளது.
இருப்பினும் தடையை மீறி நெகிழிப் பைகள் தொடர்ந்து உற்பத்திசெய்யப்பட்டு, விற்பனை செய்யப்படுவதாகவும், அந்த நிறுவனங்களுக்கு எதிராக அபராதம் விதித்து நடவடிக்கை எடுக்க உத்தரவிடக்கோரி சமூக செயற்பாட்டாளர் ஆண்டனி கிளமென்ட் ரூபன் தென் மண்டல பசுமைத் தீர்ப்பாயத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த தேசிய பசுமைத் தீர்ப்பாய நீதித் துறை உறுப்பினர் ராமகிருஷ்ணன், நிபுணத்துவ உறுப்பினர் சாய்பால் தாஸ்குப்தா அடங்கிய அமர்வு, தடையை மீறி நெகிழிப் பொருள்களை உற்பத்திசெய்யும் நிறுவனங்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன, தவறிழைத்தவர்களிடமிருந்து வசூலிக்கப்பட்ட அபராதத் தொகை எவ்வளவு அரசாணையைச் செயல்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன? என்பன குறித்து விவரங்களுடன் விரிவான அறிக்கையை இரண்டு மாதங்களுக்குள் தாக்கல்செய்ய தமிழ்நாடு அரசுக்கும், சென்னை பெருநகர மாநகராட்சிக்கும் தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியத்துக்கும் உத்தரவிட்டது.
மேலும், வழக்கு விசாரணையை செப்டம்பர் 11ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.