ஈரோடு மாநகரத்தில் சுமார் 500க்கும் மேற்பட்ட மேக்ஸ் கேப் வாகனங்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த வாகனங்கள் தமிழ்நாடு மட்டுமன்றி நாடு முழுவதும் பயணிகளின் தேவை, வசதி கருதி இயக்கப்பட்டு வருகிறது. அனைத்து வாகனங்களும் அனைத்திந்திய வாகன இயக்கத்திற்கான உரிமங்களைப் பெற்றுள்ளது.
இந்நிலையில், மேக்ஸ் கேப் வாகன உரிமையாளர்கள் எப்.சிக்கு அனுமதி வழங்கக் கோரி வட்டார போக்குவரத்து அலுவலர் விநாயகத்திடம் கோரிக்கை மனு அளித்ததுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
அப்போது வாகன உரிமையாளர்கள் கூறியதாவது, "ஈரோடு கிழக்கு வட்டார போக்குவரத்துக் கழகத்தினர் வாகனங்களுக்கு ஆயுட்கால வரியான லைப் டேக்ஸ் செலுத்தியுள்ள போதும் வாகனங்களுக்கு எப்.சிக்கு அனுமதிக்க மறுக்கின்றனர்.
கடந்த 6 மாதங்களாக கரோனா ஊரடங்கால் வாகன இயக்கங்கள் முழுவதுமாக ரத்து செய்யப்பட்டு வருவாய் இழந்து தவித்து வரும் நிலையில் தற்போது ஊரடங்கில் தளர்வுகள் அனுமதிக்கப்பட்டுள்ளதால் ஓரளவு வாடகைக்கு வாகனங்கள் சென்று வரும் நிலையில் சாலையில் இயக்கிட ஆயுட்கால வரி செலுத்தப்பட்டுள்ள வாகனங்களுக்கு எப்.சி செய்து தர வேண்டும்.
பயணிகளுடன் மாவட்ட, மாநில எல்லைகளை கடந்திடும் போதும் வாகனங்களை முறையாக பராமரிக்காமல் எப்.சி செய்யாமல் இருந்தால் அதற்கான அபராதத்தையோ கடும் நடவடிக்கையோ எடுக்கப்பட்டு வருவதால் பயணிகள், வாகனங்களை நம்பியுள்ளவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு ஏற்கெனவே வரி செலுத்தியுள்ள வாகனங்களுக்கு எப்.சிக்கு அனுமதியளித்திட வேண்டும்.
ஈரோடு மாவட்டத்தில் உள்ள மற்ற வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் வாகனங்களுக்கு எப்.சிக்கு அனுமதிக்கப்படுவது போல் ஈரோடு வட்டார போக்குவரத்து அலுவலகத்திலும் அனுமதிக்க வேண்டும்" என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதைத் தொடர்ந்து, வாகன உரிமையாளர்களின் கோரிக்கை மனு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அலுவலர்கள் தெரிவித்தனர்.