மன்னார்குடியில் தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் பி.ஆர். பாண்டியன் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது, “மத்திய அரசு தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் மூலம் விவசாயிகளுக்கு மூன்று லட்சம் ரூபாய் வரை சொத்து ஜாமீன் இன்றி வேளாண் கடன் வழங்கப்படும் என்று அறிவித்தது. ஆனால் வங்கிகள் ரூ. 1.6 லட்சத்திற்கு மேல் கடன் பெற வேண்டுமானால் சொத்து உத்திரவாத பத்திரம் (MOD) செய்து கொடுக்க வேண்டும் என வலியுறுத்துவது ஏமாற்றமளிக்கிறது.
இது குறித்து மத்திய அரசு தனது உண்மை நிலையை தெளிவுப்படுத்த வேண்டும். பொதுப்பணித் துறை சார்பில் தூர்வாரும் பணிகள் பெருமளவில் நடைபெற்று வருவது பாராட்டுக்குரியது. இதற்கு முழு முயற்சி எடுத்து வரும் உயர் அலுவலர்கள், பொதுப்பணித் துறை பொறியாளர்களுக்கும் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
தற்போது எட்டு ஆண்டுகளுக்கு பிறகு ஜூன் 12ஆம் தேதி முதலமைச்சர் குறுவை சாகுபடிக்கு நேரடியாக மேட்டூர் அணையை திறந்து வைப்பதை வரவேற்கிறோம். குறுவை தொகுப்புத் திட்டம் வழங்க இயலாது என முதலமைச்சர் அறிவித்ததை மறுபரிசீலினை செய்து, உடனே வழங்கி கரோனா தொற்றால் முடங்கி உள்ள விவசாயிகளை ஊக்கப்படுத்திட வேண்டும்.
மத்திய அரசு தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கிகளை (PACB) மீண்டும் முற்றிலும் முடக்கும் உள்நோக்கத்தோடு விவசாயிகளுக்கு வேளாண் கடன்கள் வழங்கும் அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளது. இனி கூட்டுறவு வேளாண் கடன்கள் மத்திய கூட்டுறவு வங்கிகளில் ஒவ்வொரு விவசாயியும் தனித்தனி வங்கி கணக்குகள் தொடங்கி பெற்றுக்கொள்ள வேண்டுமென சுற்றறிக்கை அனுப்பி உள்ளனர்.
இதன் மூலம் விவசாயிகளின் பங்குத்தொகை மூலம் செயல்படுத்தப்படும் தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கிகளை முடக்கப்படுவது வண்மையாகக் கண்டிக்கத்தக்கது. 2011-12ஆம் நிதி ஆண்டில் இது போன்ற நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொண்டபோது அன்றைய முதலமைச்சர் ஜெயலலிதா அதனை ஏற்கமாட்டோம் என அறிவித்ததோடு, செயல்படுத்தியும் காட்டினார்.
இந்நிலையில், தற்போது மீண்டும் முடக்கும் மத்திய அரசின் முயற்சியை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தடுத்து நிறுத்த முன்வர வேண்டும்” என்று தெரிவித்தார்.