சென்னை, பெங்களூருஉள்ளிட்ட பல்வேறு நகரங்களில் அட்டிகா ஜுவல்லரி செயல்பட்டுவருகிறது. இந்நிறுவனத்தின் உரிமையாளரான பொம்மனஹள்ளி பாபு மீது சென்னை எழும்பூரைச் சேர்ந்த தொழிலதிபர் நிஜாமுதீன் என்பவர் புகார் அளித்துள்ளார்.
அதில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு தனது சொகுசு கார் ஒன்றை அட்டிகா ஜூவல்லரி உரிமையாளரான பொம்மனஹள்ளி பாபு 45 லட்சம் ரூபாய் பணம் கொடுத்து வாங்கிச் சென்றதாகவும், காரை மூன்று மாதம் பயன்படுத்தியப் பிறகு திருப்பி கொடுத்துவிட்டு பணத்தை கேட்கிறார். காரை பயன்படுத்திவிட்டு பணத்தை திருப்பி கேட்பது எப்படி முறையாகும் என குறிப்பிட்டுள்ளார்.
அதே வேளையில் பொம்மனஹள்ளி பாபு தரப்பில் கொடுத்த 45 லட்ச ரூபாய் முன்பணத்தில் 15 லட்சத்தை தொழிலதிபர் நிஜாமுதீன் திருப்பி கொடுத்து விட்டதாகவும், மீதமுள்ள 30 லட்சம் பணத்தை திருப்பி பெற்றுத் தர வேண்டும் எனவும் அட்டிகா ஜூவல்லரி உரிமையாளர் தரப்பிலும் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து விசாரணை நடத்தி வரும் எழும்பூர் குற்றப் பிரிவு போலீசார், இந்த விவகாரத்தில் அட்டிகா ஜூவல்லரி உரிமையாளர் பொம்மனஹள்ளி பாபு நேரடியாக சம்மந்தப்பட்டிருப்பதால், அவர் 16ஆம் தேதி நேரில் விசாரணைக்கு ஆஜராகுமாறு சம்மன் அனுப்பியுள்ளனர்.