வேலூர் மாவட்டம் கிளித்தான்பட்டறை பகுதியைச் சேர்ந்தவர், லாரி தரகர் சந்திரசேகர் (50).
இவர் வேலை சம்பந்தமாக அடிக்கடி வெளியூர் சென்று வருவதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் இரண்டு நாட்களுக்கு முன்பு, சேலம் சென்று வருவதாகக்கூறி, வீட்டை விட்டு வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை.
இதையடுத்து அவரது குடும்பத்தினர், உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடியுள்ளனர். இந்நிலையில் இவர் திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி ரயில் நிலைய குடியிருப்பு அருகே சடலமாக கிடந்துள்ளார்.
இதுகுறித்து அவ்வழியாகச் சென்றவர்கள் காவல் துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வாணியம்பாடி நகர காவல் துறையினர், அவருடைய சடலத்திற்கு அருகில் விஷபாட்டில், விஷம் கலந்த மது, அவருடைய சட்டை பையில் செல்போன் மற்றும் ரூ.7000 பணம் இருந்ததைக் கண்டறிந்தனர்.
மேலும் அவருடைய செல்போனில் இருந்த தொடர்பு எண்களை வைத்து, அவருடைய உறவினர்களுக்குத் தகவல் கொடுத்து, பின்னர் சடலத்தை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
காவல் துறையினர் நடத்திய முதற்கட்ட விசாரணையில், மதுவில் விஷம் கலந்து குடித்தது தெரியவந்துள்ளது.
மேலும் இவர் கடன் பிரச்னையால் தற்கொலை செய்துகொண்டாரா? அல்லது வேறு ஏதேனும் பிரச்சனையா? என்பது குறித்து வழக்குப்பதிவு செய்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.