நீலகிரி மாவட்டம், குன்னூரில் வனப் பகுதிகள் அழிக்கப்பட்டும் ஆக்கிரமிக்கப்பட்டுமே தற்போதுள்ள பெரும்பாலான தேயிலைத் தோட்டங்களும் கட்டடங்களும் எழுப்பப்பட்டு பயன்பாட்டில் இருந்து வருகின்றன.
வனங்கள் அழிக்கப்பட்டு உருவாக்கப்பட்ட பகுதிகள் என்பதால் காட்டு உயிர்கள் போதிய உணவின்றி நகர் பகுதிகளுக்குள் வந்து செல்வது சமீபத்தில் அதிகரித்து வருகிறது.
அந்த வகையில், குன்னூர் ஆப்பிள்பீ பகுதியில் கடந்த ஒரு வார காலமாக சிறுத்தை புலி ஒன்று அதிகாலை நேரங்களில் வந்து கால்நடைகளான மாடு, ஆடு, வாத்து போன்றவற்றை அடித்து, வேட்டையாடிக் கொண்டு செல்வது அதிகரித்துள்ளது.
இந்நிலையில், நேற்று அதிகாலை வெலிங்டன் கண்டோன்மெண்ட் அருகே பதுங்கி இருந்த சிறுத்தை புலி, அங்கு சுற்றித் திரிந்த நாய் ஒன்றை வேட்டையாட முயன்றுள்ளது.
![Leopard atrocity in konnur - People in panic](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/12:07_tn-nil-1-12-lapad-attack-tn-10012_12062020182442_1206f_02599_1103.jpg)
இதில், சிறுத்தை புலியிடமிருந்து போராடி அந்த நாய் அதிஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளது. குற்றுயிரும் கொலை உயிருமாய் தப்பித்த அந்த நாய் குறித்து அப்பகுதி மக்கள் அளித்த தகவலின் பேரில், அருவங்காடு, காணிக்கராஜ் நகர் பகுதியில் உள்ள உலகளாவிய கால்நடை மருத்துவப் பரிசோதனை மைய நிர்வாகிகள் விரைந்து வந்து, அதனை சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.
கால்நடை மருத்துவர் முகேஷ் தலைமையிலான குழுவினர் அளித்த சிறப்பு சிகிச்சையை அடுத்து அந்த நாய் உயிர் பிழைத்தது. தொடர்ந்து விலங்குகள், பறவைகளைப் பிடித்து செல்லும் சிறுத்தை புலி, குடியிருப்புப் பகுதியில் உள்ள மனிதர்களையும் தாக்கும் அபாயம் உள்ளதால் கூண்டு வைத்து அதனைப் பிடித்து வனப் பகுதிக்குள் விட வேண்டுமென அப்பகுதி மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
அதனைத் தொடர்ந்து, மீண்டும் சிறுத்தை புலி அப்பகுதியில் நுழைந்தால் கூண்டு வைத்து பிடிக்கப்படும் என வனத்துறையினர் உறுதி அளித்தனர்.
சிறுத்தை புலிகளின் நடமாட்டம் குறித்த விவரங்களை சேகரிக்க அங்கு, தானியங்கி கண்காணிப்பு கேமராக்களும் பொருத்தப்பட்டன.
குன்னூர் நகர் பகுதிகளுக்குள் புகுந்து அட்டகாசம் செய்து வரும் சிறுத்தை புலியால் அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சம் ஏற்பட்டுள்ளது.