பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், "கடந்த மார்ச் 16 ஆம் தேதி பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டது. மீண்டும் மே 4ஆம் தேதி பெட்ரோல் 3.26 ரூபாய் உயர்ந்து, 75.54 ரூபாயானது. டீசல் 2.51 ரூபாய் உயர்ந்து, 68.22 ரூபாயானது. தற்போது 34 நாள்களுக்குப் பிறகு மீண்டும் பெட்ரோல் விலை 53 காசுகளும், டீசல் விலை 52 காசுகளும் உயர்த்தப்பட்டுள்ளன.
அதேபோல, தமிழ்நாடு அரசு கடந்த மே 4ஆம் தேதி மதிப்புக் கூட்டுவரியை உயர்த்தியதால், பெட்ரோல் விலை 3.26 ரூபாய், டீசல் விலை 2.51 ரூபாயாக ஏற்கனவே உயர்ந்து.
பாஜக ஆட்சியில் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை 70 விழுக்காடு குறைந்துள்ளது. இந்த விலைச் சரிவைப் பயன்படுத்தி பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்காமல் 2014 முதல் இதுவரை 16 லட்சம் கோடி ரூபாய் வரி விதித்துள்ளது. இதில் கலால் வரி மட்டும் 11 லட்சம் ரூபாய் கோடியாகும். இந்த வகையில் பாஜக அரசு கஜானாவை நிரப்பிக் கொண்டது. இதுவரை 12 முறை கலால் வரி உயர்த்தப்பட்டிருக்கிறது. இதனால் பெட்ரோலிய நிறுவனங்களின் லாபம் மூன்று மடங்கு உயர்ந்துள்ளது.
பாஜக. ஆட்சியின் ஆறு ஆண்டுகளில் ஒரு லிட்டர் டீசலுக்கு 3.56 ரூபாயாக இருந்த கலால் வரியை, 31.83 ரூபாயாக உயர்த்திக் கொண்டது. இது 800 விழுக்காடு வரி உயர்வாகும். வரலாற்றில் இல்லாத அளவுக்கு கலால் வரியை உயர்த்தி, மக்கள் மீது ஏற்றப்பட்டிருக்கிற சுமையைக் கண்டு கவலைப்படாத அரசாக பாஜக அரசு விளங்கி வருகிறது.
சர்வதேச சந்தையில் வரலாறு காணாத வகையில் கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சியடைந்தபோது, பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்காத பாஜக ஆட்சி ஒரு மக்கள் விரோத ஆட்சி. எனவே, கரோனா தொற்றினாலும், பொது ஊரடங்கினாலும், வேலையை இழந்து, வாழ்வாதாரத்தைப் பறிகொடுத்து, உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கிற மக்கள் மீது பெட்ரோல், டீசல் விலையை உயர்த்திய பாஜக அரசை வன்மையாகக் கண்டிக்கிறேன். இந்த விலை உயர்வை உடனடியாகத் திரும்பப்பெற வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.