ஈரோடு மாவட்டம் சென்னிமலை அருகேயுள்ள கொடுமணலில் கடந்த சில மாதங்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அகழாய்வுப் பணியை தமிழ்நாடு தொல்லியல் துறையினர் தற்போது மீண்டும் தொடங்கியுள்ளனர். இஸ்லாமிய நாடுகளுடன் தமிழ்நாட்டுக்கு வணிகத் தொடர்புள்ளது என்பதை ஆதாரங்களுடன் நிரூபித்துள்ள கொடுமணலில் இப்போது மிகத் தீவிரமாக மேற்கொண்டு ஆய்வுப் பணிகள் நடந்து வருகின்றது.
தொடர்ந்து நடைபெற்றுவரும் இந்த ஆய்வில் சில நாள்களாக முக்கியமான பொருள்கள் கிடைத்து வருகின்றன. குறிப்பாக, இரும்பை உருக்கக் கூடிய உலை, விலங்குகளின் மண்டை ஓடுகள் ,பெருங்கற்கால கல்வட்டம், ஈமச்சின்னங்கள் உள்ளிட்டவை கிடைத்து வருகின்றன. தமிழ்நாட்டின் தொல்லியல் பொருள்களில் மிக முக்கியமான இடத்தை வகித்துவரும் கருப்பு, சிவப்பு பானை ஓடுகள், மண்கலங்கள், பானையை சுட வைக்கும் பிரிமனைகள், சுடுமண்ணால் ஆன மணி வகைகள், இரும்புகளாலான அம்புகள் என பல அரிய பொருள்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.
இது குறித்து தமிழ்நாடு தொல்லியல் குழுவைச் சேர்ந்த அலுவலர்கள் தெரிவிக்கையில், 'தற்போது நடைபெற்று வரும் அகழாய்வுப் பணியில் வேறெங்கும் கிடைத்திடாத வகையில் ஈமச்சின்னங்கள் முழுமையானதாகவும், எளிதில் கண்டறிந்திடும் வகையில் ஈமச்சின்னங்கள் திசைகளைக் காட்டிடும் வகையிலும் கண்டெடுக்கப்பட்டுள்ளன். உயிர்நீத்தவர்களுடன் வைக்கப்படும் படையல் பொருள்கள் (ஒன்பது பானைகளில் வைக்கப்பட்டிருக்கும்) மிகவும் வித்தியாசமான நடைமுறையை வெளிப்படுத்திடும் வகையில் அமைந்துள்ளது" என தெரிவித்துள்ளனர்.
இங்கு கிடைக்கப்பெற்றுள்ள ஈமச்சின்னம் ஏனையப் பகுதியைக் காட்டிலும் வித்தியாசமானதாக கருதப்படுவதற்கு காரணம் இருக்கிறது.
பெரிய அளவில் இருப்பதால் இது ஒரு குழுத்தலைவரின் ஈமச்சின்னமாக இருக்கக்கூடும் என்றும் அவரது கல்லறையில் ஒரு பகுதியில் அவரது உடலையும் மறுபகுதியில் அவருக்கு விருப்பமான பொருள்களையும் வைத்து புதைக்கப்பட்டிருப்பது விந்தையான வழக்கத்தை வெளிப்படுத்துவதாகவும் தொல்லியல் ஆர்வலர்கள் கூறுகின்றனர்.