தமிழ்நாட்டில், கிசான் திட்டத்தில் பெருமளவில் முறைகேடுகள் நடைபெற்று கண்டறியப்பட்டது. போலி விவசாயிகளை இந்த திட்டத்தில் சேர்த்து அவர்களுக்கு உதவி தொகை வழங்கப்பட்டுள்ளது.
அரசியல் கட்சியினர் பல ஆயிரம் எண்ணிக்கையில் விண்ணப்பங்களை சமர்ப்பித்து சேவை மையங்களில் அரசின் யூசர் நேம் பாஸ்வேர்ட் ஆகியவற்றை பயன்படுத்தி இந்த முறைகேடுகள் நடந்துள்ளன.
அந்த வகையில், விழுப்புரம் மற்றும் கடலூர் மாவட்டங்களில் விண்ணப்பித்தவர்களில் 192 பேர் குமரி மாவட்டத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தனர்.
இங்குள்ளவர்களின் வங்கிக்கணக்கில் பணம் வந்த நிலையில் அந்த கணக்குகள் அனைத்தும் முடக்கப்பட்டு அவர்களிடமிருந்து பணம் திரும்பப் பெறப்பட்டு வருகிறது.
மேலும் குமரி மாவட்டத்தில் கடந்த ஏப்ரல் மாதத்திற்கு பிறகு கிசான் திட்டத்தில் அங்கீகரிக்கப்பட்ட 14 ஆயிரம் பேரின் விண்ணப்பங்கள் அலுவலர்கள் ஆய்வு செய்தனர்.
அதில், 246 பேர் தகுதியற்றவர்கள் என்பது கண்டறியப்பட்டது. இதைத் தொடர்ந்து, இவர்களது வங்கி கணக்குகளை முடக்கி அவர்களுக்கு வழங்கப்பட்ட 2000 முதல் 4000 ரூபாய் வரையிலான உதவித் தொகை திரும்ப வசூலிக்கப்பட்டு வருகிறது.
இதற்கிடையில், தமிழ்நாட்டில் கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டை, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் அதிக அளவில் கிசான் திட்டத்தில் மோசடி நடைபெற்றுள்ளது.
பல கோடி ரூபாய் இந்த மாவட்டங்களிலிருந்து வசூல் செய்ய வேண்டிய நிலை உள்ளது.
இந்த மாவட்டங்களில் போதிய எண்ணிக்கையில் பணியாளர்கள் இல்லாத நிலையில் குமரி மாவட்டத்திலிருந்து 12 பேர் கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் கிசான் திட்டத்தின் கீழ் மோசடியில் பணம் பெற்றவர்களிடமிருந்து பணத்தை வசூலிக்கும் பணியில் அங்குள்ள அதிகாரிகளுக்கு உதவியாக பணியாற்றுவார்கள்.