கிரிக்கெட் திருவிழா என்று கொண்டாடப்படும் உலகக்கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. பொதுவாக, உலகக்கோப்பை தொடர் என்றாலே, ரசிகர்களுக்கு தனி உற்சாகமும் ஈர்ப்பும் இருக்கும்.
ஆனால், தற்போது இங்கிலாந்தில் நடைபெற்று வரும் தொடரின் மீது ரசிகர்களுக்கு வெறுப்புதான் அதிகமாக இருக்கிறது. 10 அணிகள் மட்டுமே பங்கேற்கும் இந்தத் தொடரில் மழை 11ஆவது அணியாக விளையாடுவதுதான் இதற்கு முக்கிய காரணமாக நெட்டிசன்கள் கலாய்க்கின்றனர்.
இலங்கை - பாகிஸ்தான், இலங்கை - வங்கதேசம், தென்னாப்பிரிக்கா - வெஸ்ட் இண்டீஸ் ஆகிய மூன்று போட்டிகள் மழையால் கைவிடப்பட்ட நிலையில், நேற்று இந்தியா - நியூசிலாந்து ஆட்டமும் ரத்து செய்யப்பட்டது.
இதன் மூலம், உலகக் கோப்பை வரலாற்றிலேயே இந்தத் தொடரில்தான் அதிகமான போட்டிகள் மழையால் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனால், சமுகவலைதளங்களில் நெட்டிசன்கள் உலகக்கோப்பை தொடர் குறித்து கலக்கல் மீம்ஸ்களை சமூகவலைதளங்களில் பதிவிட்டுவருகின்றனர். தற்போது அந்த வரிசையில் இங்கிலாந்து அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் கெவின் பீட்டர்சனும் இணைந்துள்ளார்.
மழையின் எதிரொலியால், உலகக்கோப்பை தொடரின் இறுதிப்போட்டி நீருக்கு அடியில் நடைபெறும் என்பதை போன்ற மீம் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். தற்போது இந்த புகைப்படம் சமூகவலைதளங்களில் வைரலாகிவருகிறது.