12ஆவது உலகக் கோப்பை ஒருநாள் கிரிக்கெட் இங்கிலாந்தில் இன்னும் 12 நாட்களில் தொடங்கவுள்ளது. இதில், பங்கேற்பதற்கான அனைத்து அணிகளின் வீரர்கள் பட்டியல் கடந்த மாதமே தெரிவிக்கப்பட்டன. அந்த வகையில், விராட் கோலி தலைமையிலான 15 வீரர்கள் கொண்ட இந்திய அணியின் பட்டியலை பிசிசிஐ கடந்த மாதம் 15ஆம் தேதி அறிவித்தது.
அதில், விராட் கோலி (கேப்டன்), ரோகித் ஷர்மா, ஷிகர் தவான், தினேஷ் கார்த்திக், தோனி, ஜடேஜா, விஜய் சங்கர், ஹர்திக் பாண்டியா, கே.எல்.ராகுல், குல்தீப் யாதவ், சாஹல், புவனேஷ்வர் குமார், முகமது ஷமி, பும்ரா இவர்களுடன் கேதர் ஜாதவும் அணியில் இடம்பெற்று இருந்தார்.
பார்ட் டைம் ஆல்ரவுண்டரான கேதர் ஜாதவ் 6ஆவது வரிசையில் களமிறங்கி அதிரடியாக விளையாடும் திறன் கொண்டவர். அதேபோல், அணிக்கு தேவைப்படும்போது தனது சுழற்பந்துவீச்சின் மூலம் விக்கெட்டுகளை எடுத்தும் அசத்துவார். இதையடுத்து, ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சென்னை அணிக்காக விளையாடி வந்த இவர், பஞ்சாப் அணிக்கு எதிரான கடைசி லீக் போட்டியின்போது இவரது தோள்பட்டையில் காயம் ஏற்பட்டது. இதனால், ஐபிஎல் தொடரின் பிளே ஆஃப் சுற்றுப் போட்டிகளிலிருந்து முழுவதுமாக விலகினார்.
இதனால், இவருக்கு மாற்றுவீரராக ரிஷப் பந்த், அம்பதி ராயுடு, இஷாந்த் ஷர்மா, நவ்தீப் சைனி ஆகியோர்களில் ஒருவர் தேர்ந்தெடுப்பார் என கூறப்பட்டது. இந்நிலையில், இவர் காயத்தில் இருந்து முழுமையாக குணமாகி, முழு உடற்தகுதியும் பெற்று விட்டார் என இந்திய அணியின் பிசியோதெரபிஸ்ட் பேட்ரிக் பர்ஹர்ட் பிசிசிஐக்கு அறிக்கை சமர்பித்தார்.
இதன் மூலம், உலகக் கோப்பை ஒருநாள் கிரிக்கெட்டில் கேதர் ஜாதவ் விளையாடுவார் என்பது உறுதியாகிவிட்டது. இதைத் தொடர்ந்து, வரும் 23ஆம் தேதி இங்கிலாந்துக்கு புறப்படும் இந்திய அணியில் அவர் இணைந்துக் கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.