கன்னியாகுமரி மாவட்டத்தில் கரோனா தடுப்பு நடவடிக்கையாக வெளிநாடு, வெளிமாநிலங்களிலிருந்து வருவோர் தமிழ்நாடு, கேரள எல்லைப் பகுதியான களியக்காவிளை சோதனைச் சாவடியில் தீவிரமாகக் காண்காணிக்கப்படுகின்றனர்.
மருத்துவப் பரிசோதனைக்குப் பின்னர் அனைவரும் அங்கிருந்து அனுப்பிவைக்கப்படுகின்றனர்.
இந்நிலையில் திருவட்டாரை அடுத்துள்ள ஆற்றூரில் உள்ள கல்லூரி விடுதியில் செயல்படும் முகாமில் ஜம்மு காஷ்மீர், ராஜஸ்தானிலிருந்து வந்த ராணுவ வீரர்கள், சிலர் தங்கவைக்கப்பட்டனர்.
அந்த மையத்தில் உணவு, தண்ணீர், கழிப்பறை இன்றி அந்த மையத்தில் வைக்கப்பட்டுள்ள ராணுவ வீரர்கள் உள்பட அனைவரும் சிரமம் அடைந்துள்ளனர்.
இது குறித்து ராணுவ வீரர்கள் புகார் தெரிவித்து பதிவிட்டுள்ள காணொலி சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது. அதில், "ராணுவ வீரர்கள் தங்கவைக்கப்பட்டுள்ள மையத்தில் குடிப்பதற்குத் தண்ணீர்கூட இல்லாத நிலை உள்ளது. இங்கு வைக்கப்பட்டுள்ள பெண், ஒன்றரை வயது கைக்குழந்தையுடன் கழிப்பறைகூட செல்ல முடியாமல் அவதி அடைந்துள்ளனர்.
இது குறித்து சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் புகார் அளித்தால், அலட்சியமாகப் பதில் அளிக்கின்றனர். முடிந்தால் இருங்கள், இல்லையென்றால் செல்லுங்கள் என்று பேசுகின்றனர். புதர்கள் மண்டி, பாழடைந்து கிடக்கும் மையத்தில் எவ்வித பாதுகாப்பும் இல்லை. இதற்கு அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" எனத் தெரிவித்துள்ளனர்.