உலகக்கோப்பை தொடரின் இன்றைய மற்றொரு ஆட்டத்தில், வெஸ்ட் இண்டீஸ் அணி, நியூசிலாந்து அணியுடன் பலப்பரீட்சை நடத்தி வருகிறது. மான்செஸ்டரில் நடைபெற்றுவரும் இப்போட்டியில், டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பந்துவீசத் தீர்மானித்தது.
இதைத்தொடர்ந்து, நியூசிலாந்து அணியின் தொடக்க வீரர்களாக களமிறங்கிய கப்தில் முதல் பந்திலேயே ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து, முன்ரோவும் அவரது பந்திலேயே பெவிலியனுக்கு நடையைக் கட்ட, அந்த அணி இரண்டு விக்கெட்டுகளை இழந்து ஏழு ரன்களை எடுத்து திணறியது.
இந்த இக்கட்டான நிலையில், ரோஸ் டெய்லருடன் ஜோடி சேர்ந்த கேப்டன் வில்லியம்சன் தனது சிறப்பான ஆட்டத்தால் அணியின் ஸ்கோரை உயர்த்தினார். இந்த ஜோடி 160 ரன்களை சேர்த்த நிலையில், டெய்லர் 69 ரன்களில் ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து, டாம் லதாமுடன் ஜோடி சேர்ந்து அபாரமாக ஆடிய வில்லியம்சன், இந்தத் தொடரில் பேக் டூ பேக் சதங்களை விளாசி மிரட்டினார்.
இதைத்தொடர்ந்து, டாம் லதாம் 12 ரன்களில் ஆட்டமிழந்தாலும், தொடர்ந்து அபாரமாக ஆடிய வில்லியம்சன் 14 பவுண்டரிகள், ஒரு சிக்சர் என 148 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து, ஜேம்ஸ் நீஷம், காலின் டி கிராண்ட்ஹோம், மிட்சல் சான்ட்னர் ஆகியோர் அதிரடியாக ஆடிய கையோடு அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.
இறுதியில் நியூசிலாந்து அணி 50 ஓவர்களில் எட்டு விக்கெட்டுகளை இழந்து 291 ரன்களை எடுத்துள்ளது. வெஸ்ட் இண்டீஸ் அணி சார்பில் ஷெல்டான் காட்ரெல் நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தினார். முதல் ஓவரிலேயே இரண்டு விக்கெட்டுகளை இழந்தாலும், மனம் தளராமல் 148 ரன்களை அடித்து அணியை மீண்டும் ஒருமுறை காப்பாற்றிய வில்லியம்சனின் ஆட்டத்தைக் கண்டு ரசிகர்கள் பிரமித்துள்ளனர்.