கடந்த 2017 மார்ச் 12ஆம் தேதி அன்று தனியார் தொலைக்காட்சி ஒன்றில் நடைபெற்ற நிகழ்வில் கமல்ஹாசன் மகாபாரதத்தை இழிவுபடுத்திப் பேசியதாகவும், இதனால் அவர் மீது வழக்குப்பதிவு செய்யக் கோரியும், திருநெல்வேலி மாவட்டம், வள்ளியூர் குற்றவியல் நீதிமன்றத்தில் பழவூரைச் சேர்ந்த ஆதிநாதசுந்தரம் என்பவர் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் நடிகர் கமல்ஹாசன் சார்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டிருந்தது. அம்மனுவில், “தொலைக்காட்சி நேர்காணலில் நெறியாளர் பெண்கள் பாதுகாப்பு தொடர்பாக எழுப்பிய கேள்விக்கு என் மனதில்பட்டதைத் தெரிவித்தேன்.
யாருடைய மனதையும் புண்படுத்தும் நோக்கத்தில், அந்த நிகழ்ச்சியில் நான் என்னுடைய கருத்தைத் தெரிவிக்கவில்லை. வள்ளியூர் நீதிமன்றம் அனுப்பிய சம்மனில் என் மீது என்ன குற்றச்சாட்டு கூறப்பட்டுள்ளது ? என்ன பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது ? என்பன குறித்த விவரங்கள் குறிப்பிடப்படவில்லை.
எனவே, வள்ளியூர் நீதிமன்றத்தில் உள்ள வழக்கை ரத்து செய்ய வேண்டும்" என வேண்டுகோள் விடுத்திருந்தார். இந்த வழக்கு ஏற்கனவே விசாரித்த நீதிமன்றம் வள்ளியூர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கு என்பதால் அது தொடர்பான விசாரணைக்கு மதுரை கிளை நீதிமன்றம் இடைக்கால தடை விதித்திருந்தது.
இந்நிலையில் இன்று(ஜூலை 16) இந்த வழக்கு நீதிபதி கிருஷ்ணவள்ளி முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை விசாரித்த நீதிபதி, இந்த வழக்கின் மீதான இறுதி விசாரணையை இரண்டு வாரத்திற்கு ஒத்திவைப்பதாக உத்தரவிட்டார்.