தூத்துக்குடி: ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பின் மாநில தலைவர் தியாகராஜன் தூத்துக்குடியில் நேற்று (ஏப். 22) செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், "நாடு முழுவதும் கரோனா இரண்டாவது அலை தீவிரமெடுத்துவருகிறது.
முதல்கட்ட பாதிப்பை விட இரண்டாம் கட்ட பாதிப்பு அதி தீவிரமாக உள்ளது. நாடு முழுவதும் பலர் கரோனாவினால் உயிரிழந்திருக்கிறார்கள். இதனால் பொதுமுடக்கம், பொதுப் போக்குவரத்து முடக்கம் ஆகியவை அமல்படுத்தப்பட்டுள்ளன.
![Jacto-geo state president thyagarajan](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/04:51:28:1619090488_tn-tut-01-jacto-jeo-president-pressmeet-vis-script-7204870_22042021160442_2204f_1619087682_1002.jpg)
கரோனாவினால் பாதிக்கப்பட்ட துறைகளில் பள்ளிக் கல்வித்துறையும் மிக முக்கியமானது. இதனால், கல்லூரி போன்றவற்றில் பணியாற்றும் பேராசிரியர்கள் தங்களது இல்லங்களிலிருந்து மாணவர்களுக்கு வகுப்பு எடுக்கலாம் என்ற உத்தரவை அரசாங்கம் பிறப்பித்துள்ளது.
ஆனால், பள்ளிகளைப் பொறுத்தவரை ஆசிரியர்கள் பள்ளிகளுக்கு வந்து மாணவர்களுக்கு பாடம் சொல்லித் தரவேண்டும் என அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. தற்போதும், அந்த நடைமுறை தொடர்ந்து வருகிறது.
ஆசிரியர்கள், மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் தங்களது இல்லங்களில் இருந்தவாரே மாணவர்களுக்கு வகுப்பு எடுப்பதற்கு அரசாங்கம் வழிவகை செய்ய வேண்டும்.
கரோனாவின் தீவிரம் கட்டுக்குள் கொண்டு வரப்பட்ட பின் நிச்சயமாக பொதுமுடக்கம் செய்யப்பட்டிருந்த நாள்களுக்கும் சேர்த்து மாணவர்களுக்கு கற்பித்தல் அளவை எட்டுவதற்கு ஆசிரியர் சமுதாயம் நிச்சயம் பாடுபடும்.
நீட் தேர்வை தமிழ்நாட்டில் இருந்து அகற்ற வேண்டும் என்பதுதான் ஆசிரியர் கூட்டமைப்பின் கோரிக்கை. ஆனால், ஒரு புறம் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்பதற்கு குரல் கொடுத்து விட்டு மறுபுறம் நீட் தேர்வுக்காக மாணவர்களுக்கு பயிற்சி தர சொல்லி ஆசிரியர்களை வரவழைக்க செய்யும் நடவடிக்கைகளும் நிகழ்ந்து வருகின்றன.
ஆகவே, இந்த இரட்டை நடவடிக்கைகளை விட்டுவிட்டு நீட் தேர்வை ரத்து செய்வதற்கான முயற்சிகளில் இந்த அரசாங்கம் முழுமையாக இறங்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்" என்றார்.