12ஆவது ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் லீக் போட்டிகள் இன்றுடன் முடிவடைகிறது. இந்நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் - கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகளுக்கு இடையிலான 55ஆவது லீக் போட்டி மொகாலியில் நடைபெற்றது.
இதில், டாஸ் வென்ற பஞ்சாப் அணியின் கேப்டன் அஷ்வின் முதலில் பந்துவீச தீர்மானித்தார். இதைத்தொடர்ந்து, பேட்டிங் செய்த சென்னை அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 170 ரன்களை குவித்தது. அந்த அணியில் அதிகபட்சமாக டு பிளசிஸ் 96, ரெய்னா 53 ரன்களை அடித்தனர். பஞ்சாப் அணி தரப்பில் சாம் கரன் மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதைத்தொடர்ந்து, 171 ரன் இலக்குடன் ஆடிய பஞ்சாப் அணி, கே.எல்.ராகுலின் அதிரடியான ஆட்டத்தால் 18 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 173 ரன்களை எட்டியது. இதன் மூலம், சென்னை அணி இப்போட்டியில், 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இப்போட்டியில் 36 பந்துகளை எதிர்கொண்ட கே.எல்.ராகுல், 7 பவுண்டரிகள், 5 சிக்சர்கள் என 71 ரன்களில் ஆட்டமிழந்தார். சென்னை அணி தரப்பில் ஹர்பஜன் சிங் மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
இந்தப் போட்டியில் சென்னை அணி தோல்வி அடைந்திருந்தாலும் புள்ளிகள் பட்டியலில் தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறது. 14 போட்டிகளில் 9 வெற்றி, 5 தோல்வி என 18 புள்ளிகளை பெற்று 0.131 என்ற நெட்ரன் ரேட்டை எடுத்துள்ளது. அவர்களுக்கு அடுத்தபடியாக டெல்லி அணி 14 போட்டிகளில் 9 வெற்றி, 5 தோல்வி என 18 புள்ளிகளை எடுத்து, 0.044 என்ற நெட்ரன் ரேட் உடன் இரண்டாவது இடத்தில் உள்ளது. இதனால், சென்னை அணி தகுதி போட்டியின் முதல் சுற்றில் விளையாடும் வாய்ப்பை பெற்றுள்ளது.