விருதுநகர் மாவட்டம் வன்னியம்பட்டியில் உள்ள உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ஜவஹர், உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.
அதில், "தமிழ்நாடு அரசு கடந்த மே 7ஆம் தேதியன்று, அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதை 58லிருந்து 59ஆக உயர்த்தி அரசாணை வெளியிட்டது. அதில் மே 1ஆம் தேதி முதலே இந்த அரசாணை பொருந்தும் என குறிப்பிடப்பட்டுள்ளது. நான் 30.04.2020 அன்று ஓய்வு பெற்றிருக்க வேண்டும். ஆனால் கல்வியாண்டு முடிவுறாததால் மே 31ஆம் தேதி வரை பணி நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது.
ஆனால் எனக்கு இந்த வயது நீட்டிப்பு அரசாணை பொருந்தாது. கரோனா நோய்த் தொற்று பிப்ரவரி மாதம் முதலே ஏற்பட்ட நிலையில், அந்த இக்கட்டான காலத்தில் பணியாற்றி அரசு பணியாளர்கள் பயன் பெறும் வகையில் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆகவே, ஓய்வு பெறும் வயதை உயர்த்தி வெளியிடப்பட்ட அரசாணை மே 1ஆம் தேதி முதலே பொருந்தும் என்பதை ரத்து செய்து உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தார்.
இதே கோரிக்கையை முன்வைத்து, விருதுநகர் செம்பட்டியைச் சேர்ந்த பார்வதி உள்பட பலர் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த மனுக்கள் ஏற்கனவே விசாரணைக்கு வந்தபோது மனுதாரர்கள் 5 பேரையும் பணியில் இருந்து விடுவிக்க உயர் நீதிமன்ற மதுரைக்கிளை இடைக்கால தடை விதித்தது. இந்நிலையில், இதே கோரிக்கையை வலியுறுத்தி மேலும் 48 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.
இந்த மனுக்கள் நீதிபதி நிஷாபானு முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர், "ஐந்து பேரையும் பணியில் இருந்து விடுவிக்க பிறப்பிக்கப்பட்ட இடைக்கால தடையை நீக்க வேண்டும் என வாதிட்டார். அதற்கு மனுதாரர் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து வழக்கு விசாரணையை ஜூன் 12ஆம் தேதிக்கு ஒத்திவைத்த நீதிபதி, 5 பேரையும் பணியில் இருந்து விடுவிக்க பிறப்பிக்கப்பட்ட இடைக்கால தடையை நீட்டித்து உத்தரவிட்டார். மேலும் புதிதாக மனுத்தாக்கல் செய்த 48 பேரின் பணி நிலையில், தற்போதைய நிலையே தொடரவும் நீதிபதி உத்தரவிட்டார்.