தருமபுரி மாவட்டம், அரூர் அருகே கீரைப்பட்டி கிராமத்தில் உள்ள காளியம்மன் கோயில் செல்லும் சாலையில் குழந்தை அழுகை சத்தம் கேட்டுள்ளது.
அப்போது, அவ்வழியாகச் சென்றவா்கள் குழந்தை இருப்பதை பார்த்துள்ளனர். உடனடியாக இது குறித்து கிராம நிர்வாக அலுவலர் ரமேஷிடம் தகவல் தெரிவித்துள்ளனர். இதையடுத்து, ரமேஷ் அரூர் காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளார்.
தகவலறிந்து, சம்பவ இடத்திற்கு வந்த துணை காவல் கண்ணகாணிப்பாளர் தமிழ்மணி தலைமையிலான காவலர்கள் குழந்தையை மீட்டு விசாரணை மேற்கொண்டனர்.
அதில், மீட்கப்பட்ட குழந்தை பிறந்து சில மணி நேரமே ஆன பெண் குழந்தை எனத் தெரியவந்தது. இதைத் தொடர்ந்து, காவல் துறையினர் பெண் குழந்தையை அரூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அதன் பிறகு, அந்தப் பெண் குழந்தை காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டது. இதையடுத்து காவல் துறையினர் சாலையின் அருகே பச்சிளங்குழந்தையை வீசிச் சென்ற நபரை விசாரணை நடத்தி தேடி வருகின்றனர்.