ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து வரும் இந்திய ஆடவர் ஹாக்கி அணி இரண்டு டெஸ்ட் ஹாக்கிப் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றது. இதில், பெர்த் நகரில் நடைபெற்ற தொடரின் முதல் போட்டியில் 0-4 என்ற கோல் கணக்கில் ஆஸ்திரலேயாவிடம் இந்திய அணி மண்ணை கவ்வியது.
இந்நிலையில், இவ்விரு அணிகளுக்கு இடையிலான கடைசி போட்டி பெர்த் நகரில் இன்று நடைபெற்றது. ஆட்டத்தின் தொடக்கத்திலேயே ஆஸ்திரேலிய வீரர் ஃப்லின் ஒகிவில்வி முதல் கோல் அடித்து மிரட்டினார். இதைத்தொடர்ந்து, பந்தை தன்வசப்படுத்தி ஆடிய ஆஸ்திரேலிய அணி 11ஆவது நிமிடத்தில் இரண்டாவது கோல் அடித்தது. ஆஸ்திரேலிய அணி சார்பில் அந்த அணியை சேர்ந்த டிரெண்ட் மிட்டான் கோல் அடித்தார். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்திய வீரர் நீலகன்ட ஷர்மா 12 ஆவது நிமிடத்தில் கோல் அடித்து அசத்தினார்.
இருப்பினும், ஆஸ்திரேலிய அணித் தொடர்ந்து சிறப்பாக ஆடியதால் 24ஆவது நிமிடத்தில் டிரெண்ட் மிட்டான், 28ஆவது நிமிடத்தில் பிளேக் கோவர்ஸ் ஆகியோர் அடுத்தடுத்து கோல் அடித்தனர். இதையடுத்து, 43 நிமிடத்தில் ஆஸ்திரேலிய அணிக்கு பெனால்டி கார்னர் வழங்கப்பட்டது. இதை சிறப்பாக பயன்படுத்திய ஆஸ்திரேலிய வீரர் டிம் அணிக்கு ஐந்தாவது கோல் அடித்தார்.
பின்னர் ஆட்டத்தின் இறுதிக்கட்டமான 53 ஆவது நிமிடத்தில் இந்திய அணிக்கு பெனால்டி கார்னர் வழங்கப்பட்டது. இந்த வாய்ப்பினை பயன்படுத்திய இந்திய வீரர் ருபிந்தர் பால் சிங் கோல் அடித்து, அணிக்கு ஆறுதல் தந்தார். இறுதியில் இந்திய அணி 2-5 என்ற கோல் கணக்கில் ஆஸ்திரேலியாவிடம் தோல்வி அடைந்தது. இதன் மூலம், இரண்டு ஹாக்கி டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆஸ்திரேலிய அணி 2-0 என்ற கணக்கில் இந்தியாவை ஓயிட்வாஷ் செய்து கோப்பையை வென்றது.