உலகக்கோப்பையில், இந்திய அணி தனது ஐந்தாவது போட்டியில், ஆப்கானிஸ்தான் அணியை எதிர்த்து விளையாடிவருகிறது. சவுதாம்ப்டனில் நடைபெற்றுவரும் இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது. இதனால், இந்திய அணி இப்போட்டியில் 300-க்கும் மேற்பட்ட ரன்களை குவிக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர்.
ஆனால், இந்திய அணியோ, ஆட்டத்தின் தொடக்கத்தில் இருந்தே ஆப்கானிஸ்தான் அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறியது. ரோகித் ஷர்மா (1), கே.எல். ராகுல் (30), விஜய் சங்கர் (29) ஆகியோர் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தாமல் ஆட்டமிழந்தாலும், கேப்டன் கோலி பொறுப்புடன் பேட்டிங் செய்தார். இந்த சமயத்தில், 63 பந்துகளில் ஐந்து பவுண்டரிகள் என 67 ரன்கள் எடுத்து செட் பேட்ஸ்மேனாக இருந்த கோலியும் மற்ற வீரர்களைப் போல் ஆட்டமிழந்தார்.
அவரைத் தொடர்ந்து, தோனி (28), ஹர்திக் பாண்டியா (7), முகமது ஷமி (1) ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இதனிடையே, மறுமுனையில், தட்டிதட்டி விளையாடிய கேதர் ஜாதவ் 52 ரன்களில் கடைசி ஓவரில் நடையைக் கட்ட, இந்திய அணி 50 ஓவர்களின் முடிவில் எட்டு விக்கெட்டுகளை இழந்து 224 ரன்களை மட்டுமே எடுத்தது. ஆப்கானிஸ்தான் அணி தரப்பில் குல்பதீன் நைப், முகமது நபி ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினர்.