உலகக்கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடரின் இன்றைய ஆட்டத்தில் இந்திய அணி வெஸ்ட் இண்டீஸ் அணியுடன் மோதியது. இதில், முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி ஏழு விக்கெட்டுகளை இழந்து 268 ரன்களை எடுத்தது. இந்திய அணியில் அதிகபட்சமாக கோலி 72, தோனி 56 ரன்கள் அடித்தார்.
இதைத்தொடர்ந்து, 269 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி, இந்திய அணியின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் திணறியது. நட்சத்திர வீரரான கெயில் (6), ஷாய் ஹோப் (5) ஆகியோர் முகமது ஷமியின் பந்துவீச்சில் அடுத்தடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இதையடுத்து, சுனில் அம்ப்ரிஸுடன் ஜோடி சேர்ந்த நிக்கோலஸ் பூரான் தாக்குப்பிடித்து ஆடினார். இந்த ஜோடி 55 ரன்களை சேர்த்த நிலையில், சுனில் அம்ப்ரிஸ் 31 ரன்களில் நடையைக் கட்ட, அவரைத் தொடர்ந்து நிக்கோலஸ் பூரானும் 28 ரன்களில் வெளியேறினார்.
இதனால், வெஸ்ட் இண்டீஸ் அணி 20.2 ஓவர்களில் நான்கு விக்கெட்டுகளை இழந்து 80 ரன்களை எடுத்திருந்தது. இதன் பிறகு, வந்த வீரர்கள் வந்த வேகத்திலேயே நடையைக் கட்டினர்.
இறுதியில், வெஸ்ட் இண்டீஸ் அணி 34.2 ஓவர்களில் 143 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதனால், இந்திய அணி இப்போட்டியில் 125 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இந்தத் தொடரில் இந்திய அணி பெறும் ஐந்தாவது வெற்றி இதுவாகும்.
இந்த தோல்வியின் மூலம், வெஸ்ட் இண்டீஸ் அணி இந்தத் தொடரில் இருந்து வெளியேறியுள்ளது. இந்திய அணி தரப்பில் முகமது ஷமி நான்கு, பும்ரா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினர்.