சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள ரங்கா ரோட்டில் மற்றும் அபிராமபுரம் ஆகிய பகுதிகளுக்கு சென்று அமைச்சர் காமராஜ் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
இதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய அவர், "கோவிட்-19 பரவலைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர தமிழ்நாடு மிகத் தீவிரமாக பணியாற்றி வருகிறது. தேனாம்பேட்டையில் நேற்று (ஜூன் 22) 172ஆக இருந்த கரோனா பாதிப்பு எண்ணிக்கை இன்று (ஜூன் 23) 105ஆக குறைந்திருக்கிறது. இன்னும் சில நாள்களில் படிப்படியாக குறைந்துவிடும் என நம்புகிறோம். சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்கள் முழுவதும் கபசுரக் குடிநீர், முகக் கவசம் ஆகியவற்றை வழங்கி வருகிறோம்.
தமிழ்நாட்டில் முழு ஊரடங்கில் பொதுமக்கள் முடிந்த அளவு ஒத்துழைப்பு கொடுத்து வருகிறார்கள். அதுமட்டுமில்லாமல், அனைத்து பொதுமக்களும் அரசு விதிமுறைகளை கடைப்பிடித்து வருகிறார்கள்.
ரேஷன் கடைகளில் கொடுக்கப்படும் ஆயிரம் ரூபாய் பணம் வீட்டுக்கு வீடு வந்து கொடுக்கப்படும். அதனை தற்போதும் கொடுத்து வருகிறார்கள். இதுவரை 53.33 விழுக்காடு அளவிற்கு ரூ.1000 பணம் வழங்கப்பட்டுள்ளது. பணம் வழங்குவதில் எந்த விதமான பிரச்னையும் இல்லை.
ஆங்காங்கே தன்னார்வலர்கள் மூலம் ஆயிரம் ரூபாய் பணம் வழங்கப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டு அரசிடம் போதுமான அளவு உணவு தானியங்கள் கையிருப்பில் இருப்பதால் அத்தியாவசியத் தேவைகள் குறித்து கவலைக்கொள்ள தேவையில்லை.ரேஷன் பொருள்கள் வந்து இறங்கும் நேரத்தில் மக்கள் கடைகளுக்குச் செல்லக்கூடாது.
சென்னையை பொறுத்தவரை ஊரடங்கிற்கு பின்னால் ஒரே பகுதியில் இருந்து பரவிவரும் கரோனா தொற்று எண்ணிக்கை குறைந்துள்ளது" என கூறினார்.