உலகளாவிய பெருந்தொற்றுநோயான கோவிட்-19 தமிழ்நாட்டில் தீவிரமடைந்துவருகிறது. மூன்றாம் கட்டப் பரவலை எட்டியிருக்கும் அதன் பரவலைக் கட்டுப்படுத்த தமிழ்நாடு முழுவதும் தளர்வுகளுடன் ஊரடங்கு கடுமையாக அமல்படுத்தப்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும் ஜூலை மாதம் முழுவதும் ஞாயிற்றுகிழமைகளில் முழு பொது முடக்கம் கடும் விதிகளுடன் அமல்படுத்தப்பட்டுள்ளன.
இதன் ஒரு பகுதியாக, அனைத்து அரசு டாஸ்மாக் கடைகளும் மூடப்பட்டுள்ளன. இந்நிலையில், விதிமுறைகளை மீறி நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் அடுத்த வடுகப்பட்டி பகுதியில் இன்று (ஜூலை 5) சட்ட விரோதமாக மது விற்பனை நடைபெற்று வருகிறது. இன்று அதிகாலை முதலே மதுப் பிரியர்கள் கூடுதல் விலை கொடுத்து மது பாட்டில்களை வாங்கிச் செல்கின்றனர்.
மேலும், அப்பகுதியில் எவ்வித அனுமதியும் இல்லாமல் 24 மணி நேரமும் சட்ட விரோதமாக மது விற்பனை நடைபெற்று வருவதாகவும், இது குறித்து காவல்துறை அலுவலர்களுக்கு பலமுறை புகார் அளித்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என அப்பகுதி பொதுமக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
மக்கள் அதிகம் வசித்துவரும் குடியிருப்பு பகுதிக்கு அருகில் நடைபெற்றுவரும் சட்ட விரோத மது விற்பனையை தடுக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.