ஹாலிவுட்டின் பிரபல நடிகையும், எழுத்தாளருமான மிண்டி கலிங் (Mindy Kalling) இயக்கத்தில் நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் வெளியான தொடர் 'நெவர் ஹேவ் ஐ எவர்' (Never Have I Ever). இத்தொடர் மக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது.
அமெரிக்க இந்திய தமிழ்ப் பெண் ஒருத்தி ஆங்கிலேயர்கள் படிக்கும் உயர்நிலைப் பள்ளியில் படிக்கிறாள். அங்கு குடும்ப உறுப்பினர்கள், நண்பர்களால் ஏற்படும் சிக்கல்களை எப்படி எதிர்கொண்டு தன்னை தற்காத்துக் கொள்கிறார் என்பதே அத்தொடரின் கதை ஆகும்.
இத்தொடரில் தமிழ்ப் பெண் மைத்ரேயி ராமகிருஷ்ணன் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த இணையத் தொடரில் நடிப்பதற்கு லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெற்ற நுழைவுத் தேர்வில் சுமார் 15 ஆயிரம் மாணவிகளை பின்னுக்குத் தள்ளி இந்த வாய்ப்பைப் பெற்றார் மைத்ரேயி.
இதில் நடித்த அனுபவம் பற்றி அவர், "கேமரா முன் இருக்கும்போது எனக்கு எந்தத் தயக்கமும் இல்லை. படப்பிடிப்பை ஒரு பள்ளியின் வகுப்பறையில் இருப்பது போல்தான் நான் உணர்ந்தேன். பெரிய வித்தியாசமாக எனக்குப் படவில்லை. முதல்நாளே அடுத்தநாள் நடிக்கவுள்ள காட்சிக்கான பிரதிகளைக் கொடுத்துவிடுவார்கள். அதற்குத் தயாராக இருக்க வேண்டும்.
காலை 9 மணி தொடங்கி மாலை 5 மணிக்குள் படப்பிடிப்பு முடிந்துவிடும். நான் இரவு முழுவதும் வசனங்களை மனப்பாடம் செய்தேன். ஒரு காட்சி சரியாக வரவேண்டும் என்றால் மெனக்கெடுவார்கள், சமரசம் ஆக மாட்டார்கள். ஒரு காட்சியை 25 தடவை கூட எடுத்தார்கள். இயல்பாக அந்தக் காட்சி வரவேண்டுமென்று பொறுமை காப்பார்கள்.

ஹாலிவுட்டில் நடிப்பதில் எனக்கு வித்தியாசம் ஒன்றும் இல்லை. அதேநேரம் நான் இலங்கைத் தமிழ் பேசி நடிப்பதை விட இதை ஒரு சிறு சவாலாகவும், மகிழ்ச்சியாகவும் ஏற்று நடித்தேன். உச்சரிப்பு, நடை, உடை, பாவனையில் சிறு மாற்றம் அவ்வளவுதான். நான் ஹாலிவுட் படத்தில் நடிப்பதாக இருந்தாலும், ஆங்கிலம் பேசி நடிப்பதாக இருந்தாலும், எனது பெயரை மாற்றிக்கொள்ள மாட்டேன்” என்றார்.