தூத்துக்குடி மாவட்டம், தெற்கு காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்து வருபவர் இசக்கிராஜா. இவர் திருநெல்வேலி மாவட்ட நீதிமன்றத்தில் பணிபுரிந்து வரும் வழக்கறிஞர் இசக்கி பாண்டியை தொடர்புகொண்டு, கொலை வழக்கில் தொடர்புடைய குற்றவாளி ஒருவரை தன்னிடம் ஒப்படைக்குமாறு மிரட்டியதாகக் கூறப்படுகிறது,
ஆனால், இசக்கி பாண்டி அந்த குற்றவாளியை உதவி ஆய்வாளரிடம் ஒப்படைக்காமல் நேரடியாக நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி உள்ளார். இதனால், ஆத்திரமடைந்த உதவி ஆய்வாளர் இசக்கி ராஜா, நேற்று (செப்.8) திருநெல்வேலி நீதிமன்றத்திற்கு வெளியே வழக்கறிஞர் இசக்கி பாண்டியை கார் ஏற்றிக்கொலை செய்ய முயன்றதாகவும், துப்பாக்கியைக் காட்டி மிரட்டியதாகவும் கூறப்படுகிறது.
இது குறித்து பாளையங்கோட்டை காவல் நிலையத்தில் வழக்கறிஞர் இசக்கிபாண்டி புகார் அளித்தார். அதன் அடிப்படையில், உதவி ஆய்வாளர் இசக்கிராஜா மீது கொலை முயற்சி, ஆபாசமாகப் பேசுதல் ஆகிய இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில், இந்த விவகாரத்தை நாளிதழ் வாயிலாகத் தெரிந்து கொண்ட மாநில மனித உரிமைகள் ஆணையம், தாமாக முன்வந்து இவ்வழக்கை விசாரணைக்கு எடுத்துள்ளது.
மேலும், இது தொடர்பாக இன்னும் இரண்டு வாரத்திற்குள் விரிவான விளக்கம் அளிக்கும்படி திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.