கரோனா ஊரடங்கால் மகாராஷ்டிரா மாநிலத்தில் சிக்கித் தவிக்கும் தமிழர்களை மீட்க கோரி வழக்குரைஞர் சூரிய பிரகாசம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
கடந்த வாரம் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, வெளி மாநிலத் தொழிலாளர்களுக்கு பொது விநியோகத் திட்டத்தின் கீழ் ரேஷனில் உணவுப் பொருள்கள் வழங்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது.
இந்நிலையில், கரோனாவை எதிர்கொள்ள ஏழை எளிய மக்களுக்கு அடுத்த பி.எம்.ஜி.கே.ஏ.ஒய் திட்டத்தின் கீழ் மத்திய அரசு, மாநில அரசுகளுக்கு ஒதுக்கிய உணவுத் தானியங்களில் 1% சதவீதத்தைக் கூட தமிழ்நாடு அரசு பயன்படுத்தவில்லை என மத்திய உணவுத்துறை அமைச்சர் ராம் விலாஸ் பாஷ்வான் கூறியிருந்ததைச் சுட்டிக்காட்டி நீதிமன்றத்தை மனுதாரர் சூரிய பிரகாசம் மீண்டும் அணுகியுள்ளார்.
இந்த வழக்கு நீதிபதிகள் கிருபாகரன் மற்றும் வேலுமணி அடங்கிய அமர்வுக்கு முன் நேற்று (ஜூலை 24) விசாரணைக்கு வந்தது.
விசாரணையின்போது மனுதாரர் சூரியபிரகாசம், உணவு மற்றும் பொது விநியோகத்துறை அமைச்சர் ராம் விலாஸ் பாஸ்வானின் அறிக்கை சமர்பித்தார்.
இதனை தமிழ்நாடு அரசுத்தரப்பு வழக்குரைஞர் பிரபாவதி கடுமையாக மறுத்தார்.
தொடர்ந்து வாதிட்ட அவர், தமிழ்நாட்டில் 5.66 லட்சம் வெளிமாநிலத் தொழிலாளர்கள் உள்ளனர். சென்னையில் மட்டும் 58 ஆயிரத்து 509 வெளிமாநிலத் தொழிலாளர்கள் உள்ளனர். இவர்களில் 4.60 லட்சம் தொழிலாளர்களுக்கு மே மாதம் 15 கிலோ அரிசி, ஒரு கிலோ பருப்பு, ஒரு கிலோ எண்ணெய் போன்ற அத்தியாவசிய உணவுப் பொருள்கள் தமிழ்நாடு அரசு சார்பில் வழங்கப்பட்டுள்ளது. ஜூன் மாதத்தில் மட்டும் 4.67 லட்சம் தொழிலாளர்களுக்கு ரேஷன் பொருள்கள் வழங்கப்பட்டுள்ளது" என தெரிவித்தார்.
இதனிடையே மத்திய அரசு சார்பில் ஆஜரான பகூடுதல் தலைமை வழக்குரைஞர் சங்கரநாராயணன், முழுமையான பதில் அளிக்க இரண்டு வாரம் கால அவகாசம் வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
மூன்று தரப்பு வாதங்களை கேட்டறிந்த நீதிபதிகள், தமிழ்நாடு அரசு குறித்து மத்திய உணவுத்துறை அமைச்சர் ராம் விலாஸ் பாஸ்வான் தெரிவித்த குற்றச்சாட்டு தொடர்பாக விளக்கமளிக்க மத்திய அரசுக்கு உத்தரவிட்டனர்.
அதேபோல, வெளிமாநிலத் தொழிலாளர்கள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து தாயகம் திரும்பிய தமிழர்களுக்கு வேலை வாய்ப்பினை உறுதி செய்ய உதவும் மையங்கள் அமைப்பது குறித்தும், மனநல ஆலோசனை வழங்குவதற்கான மையங்கள் அமைப்பது குறித்தும் விளக்கமளிக்க தமிழ்நாடு அரசுக்கும் உத்தரவிட்டனர்.
வழக்கின் மீதான விசாரணையை அடுத்த இரண்டு வார காலத்திற்கு ஒத்திவைப்பதாகக் கூறினர்.
உலகளாவிய பெருந்தொற்றுநோயான கரோனாவை எதிர்கொள்ள ஏழை எளிய மக்களுக்கு அடுத்த ஐந்து மாதங்களுக்கு பி.எம்.ஜி.கே.ஏ.ஒய் திட்டத்தின் கீழ் விலையில்லா உணவு தானியங்கள் ரேஷன் கடைகளின் வழியே வழங்கப்படுமென பிரதமர் மோடி ஜூன் 30 ஆம் தேதி அறிவித்திருந்தார். 80 கோடிக்கும் அதிகமான பயனாளிகளை சென்றடைய உள்ள இந்த திட்டத்திற்காக மத்திய அரசு ரூ. 90,000 கோடி வரை செலவிடவுள்ளது கவனிக்கத்தக்கது.