தஞ்சை பூதலூரைச் சேர்ந்த துரைசுந்தரதேவர் என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல வழக்கினைத் தாக்கல் செய்திருந்தார். அதில்,"குடிசை மாற்று வாரியத்தின் மூலம் வீடுகள் கட்டப்பட்டு, வீடில்லா ஏழைகளுக்கு வழங்கப்படும்.
தஞ்சை கூடல்நாணல் கிராமத்தில், 240 வீடுகள் கட்ட திட்டமிடப்பட்டது. இதற்கான பணிகளில் 2018ஆம் ஆண்டு மார்ச் தொடங்கிய நிலையில், நிகழாண்டு (2020) மே மாதம் பணிகள் முடிவுற்று இருக்க வேண்டும்.
இந்நிலையில், கட்டட பணிகளை பார்வையிட்டபோது விதிப்படி கட்டடங்கள் கட்டப்படாததுடன், தரமற்ற சிமெண்ட், கம்பிகளைக் கொண்டு கட்டுமான பணிகள் நடைபெற்றுவருவது தெரியவந்தது.
இதுதொடர்பாக அதிகாரிகளிடம் முறையிட்டும் பயனில்லை. தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கோரியபோதும், தற்போதுவரை எவ்வித தகவலும் கிடைக்கவில்லை. தரமற்ற பொருள்களால் கட்டப்படும் வீடுகளில் குடிபுகும் ஏழை எளிய மக்களின் வாழ்வு பாதுகாப்பற்ற நிலையிலேயே இருக்கும்.
ஆகவே தஞ்சை கூடல்நாணல் கிராமத்தில், குடிசை மாற்று வாரியத்தின் கீழ் நடைபெற்றுவரும் கட்டுமானப் பணிகளை குடிசை மாற்று வாரியத்தின் நிர்வாக இயக்குநர், செயல் அலுவலர், தஞ்சை மாவட்ட ஆட்சியர் ஆகியோர் நேரில் ஆய்வுசெய்து, கட்டடத்தின் உறுதித் தன்மையையும், அதற்காகப் பயன்படுத்தப்படும் பொருள்களின் தரத்தையும் உறுதி செய்ய உத்தரவிட வேண்டும்" என மனுவில் கோரியிருந்தார்.
இம்மனு நீதிபதிகள் சத்தியநாராயணன், ராஜமாணிக்கம் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, இம்மனு தொடர்பாக தஞ்சை மாவட்ட ஆட்சியர், குடிசை மாற்று வாரிய செயற்பொறியாளர் ஆகியோர் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை ஆகஸ்ட் 4 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.