திருநெல்வேலி மாவட்டத்தில் ஆண்டுதோறும் ஜூன், ஜூலை மாதங்களில் தென்மேற்கு பருவக்காற்று வீசுவது வழக்கம். இதன் காரணமாக மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் மிதமான சாரல் மழை அவ்வப்போது பெய்யக்கூடும். இந்தச் சாரல் மழை காரணமாக வெயிலின் தாக்கம் குறைந்து இதமான வானிலை நிலவும். ஆனால், இந்தாண்டு வழக்கத்துக்கு மாறாக ஜூலை மாதம் தொடங்கிய பிறகும்கூட, சாரல் மழை சரிவர பெய்யவில்லை.
இதற்கிடையில் கடந்த சில தினங்களாக நெல்லை மாவட்டத்தில் கடும் வெயில் வாட்டி வதைத்துவந்தது. கோடை வெயிலைப் போன்று வெப்பத்தின் தாக்கம் அதிகரித்ததால், பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகினர். இந்தச் சூழலில் இன்று பிற்பகல் திருநெல்வேலி மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது. திருநெல்வேலி மாநகர், மானூர், பாளையங்கோட்டை, களக்காடு, அம்பாசமுத்திரம், சேரன்மகாதேவி பேட்டை உள்ளிட்ட புறநகர்ப் பகுதிகளிலும் சுமார் ஒரு மணி நேரமாகப் பலத்த மழை பெய்தது.
இதனால் பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர். மாநகர்ப் பகுதியில் பெய்த பலத்த மழையால் ஒரு சில இடங்களில் கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு, சாலையில் மழைநீர் தேங்கியுள்ளது.