இந்திய-சீன எல்லையில் பதற்றம் ஏற்பட்டுள்ளதைத் தொடர்ந்து இந்திய அரசு நாடு முழுவதும் உள்ள விமான நிலையங்கள், துறைமுகங்களை உஷார்படுத்தியுள்ளது. பன்னாட்டு விமான நிலையங்களில் உள்ள சரக்ககப்பிரிவு தீவிர கண்காணிப்பிற்கு உள்ளாக்கப்பட்டுள்ளன. வெளிநாடுகளிலிருந்து இறக்குமதியாகும் பொருள்களை வெளியே அனுப்புவதிலும் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
அதேபோல் சென்னை விமான நிலைய பன்னாட்டு சரக்ககப் பிரிவுக்கு சீனாவிலிருந்து இறக்குமதியாகும் கண்டெய்னர்கள், பார்சல்கள் அனைத்தையும் தீவிரமாக ஆய்வுசெய்து பரிசோதனை செய்ய வேண்டும்.
சுங்கத் துறை உயா் அலுவலரின் அனுமதியின்றி டெலிவரி கொடுக்கக்கூடாது. சந்தேகத்திற்கிடமான கண்டெய்னர்கள், பாா்சல்களைத் திறந்துபார்த்து சோதனையிட வேண்டும். பார்சல்களில் உள்ளே என்ன பொருள்கள் உள்ளன, அதன் தரம், எந்த அளவு உள்ளது. யார் யாருக்காக அனுப்பியது, முறையான ஆவணங்கள் அனைத்தும் உள்ளனவா? என்று மிகவும் கவனமாக ஆய்வுசெய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.
சரக்கு விமானங்களில் வெளிநாடுகளிலிருந்து சென்னை விமான நிலைய சர்வதேச சரக்ககத்திற்கு வரும் கண்டெய்னர், பார்சல்களை வழக்கமாகச் சுங்கத் துறையினர் ஆய்வுசெய்து டெலிவரி எடுப்பதற்கான அனுமதி உத்தரவை (ஓஓசி, அவுட் ஆப் சாா்ஜ்) வழங்குவார்கள்.
அதை வைத்து அந்த முகமை டெலிவரி எடுத்துக்கொள்ளலாம். ஆனால் தற்போது போடப்பட்டுள்ள புதிய உத்தரவில் அதைப்போல் "ஓஓசி" கொடுத்த கண்டெய்னர்களைக்கூட டெலிவரி நிறுத்தி மீண்டும் பரிசோதிக்க முடியும். குறிப்பாக சீனாவிலிருந்து இறக்குமதியாகும் பொருள்களுக்கு மட்டும் இந்தக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
இந்த விதிமுறைகளை சுங்கத் துறையினரும், விமான நிலைய பன்னாட்டு சரக்ககப் பிரிவு அலுவலர்களும் சரிவர செயல்படுத்துகிறார்களா என்பதைக் கண்காணிக்க மத்திய வருவாய்ப் புலனாய்வுத் துறை உயர் அலுவலர்கள் திடீர் சோதனை செய்தனர்.
சென்னை விமான நிலையத்திற்கு கேத்தே பசிபிக் ஏா்லைன்ஸ் சரக்கு விமானம் வாரத்தில் ஐந்சு அல்லது ஆறு நாள்கள் சீனா, ஹாங்காங் நாடுகளிலிருந்து சரக்குகளைக் கொண்டுவருகிறது. ஒவ்வொரு முறையும் 50 ஆயிரம் கிலோவிலிருந்து ஒரு லட்சம் கிலோ வரை சரக்குகளை ஏற்றிவரும். அதுபோல் சீனாவிலிருந்து எஸ்.எஃப். எக்ஸ்பிரஸ் என்ற தனியாா் சரக்கு விமானம் சீனா தயாரிப்பு சரக்குகளை மட்டும் ஏற்றிவரும்.
சென்னை விமான நிலையத்தில் கடந்த திங்கள் இரவிலிருந்து இந்த உத்தரவு அமலுக்கு வந்துள்ளது. மத்திய அரசிடமிருந்து மறுஉத்தரவு வரும்வரை இதேநிலை நீடிக்கும் என்று சென்னை விமான நிலைய வட்டாரங்கள் தெரிவித்தன.