மார்ச் மாதம் 24ஆம் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு காரணமாக இரு மாதங்களாக அரசுப் பேருந்துகள் இயங்காமல் இருந்த நிலையில் இன்று முதல் 50 விழுக்காடு அரசுப் பேருந்துகள் மட்டும் இயக்கப்படும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்தது. இதனால் இன்று பேருந்துகள் காலை 6 மணி முதல் இயக்கப்பட்டன.
ஆனால் மதுரையிலிருந்து சின்னாளபட்டி, கொடைரோடு, வாடிப்பட்டி, திண்டுக்கல் செல்லும் பேருந்துகளும் திண்டுக்கல்லிருந்து அதே வழித்தடத்தில் மதுரை செல்லும் பேருந்துகளும் என இரு மார்க்கமாக சுமார் 20க்கும் மேற்பட்ட பேருந்துகள் சுங்கக்கட்டணம் செலுத்தவில்லை என்று கூறி சுங்கச்சாவடியில் தடுத்து நிறுத்தப்பட்டன.
கடந்த இரு மாதங்களாக அரசுப் பேருந்துகளுக்கு சுங்கக்கட்டணம் செலுத்தப்படவில்லை என்று கூறப்படுகிறது. தற்போது குறைந்தளவு பேருந்துகள் இயங்கினாலும், எந்தெந்த பேருந்துகள் இயக்கப்படுகின்றன, பேருந்து எண், அவற்றுக்கான ஒரு மாத கட்டணம் ஆகியவற்றை செலுத்தினால் மட்டுமே பேருந்துகள் அனுமதிக்கப்படும் என்று சுங்கச்சாவடி ஊழியர்கள் கூறுகின்றனர்.
இல்லையெனில், ஒவ்வொரு பேருந்தும் ஒவ்வொரு முறைக்கும் பணமாக செலுத்தி செல்லலாம் என்று கூறி சுங்கச்சாவடி ஊழியர்கள் பேருந்துகளை அனுமதிக்க மறுத்ததால் காலை ஆறு மணி முதல் பயணிகள் தங்களது ஊர்களுக்குச் செல்ல முடியாமல் மூன்று மணி நேரத்திற்கும் மேலாக காத்திருந்தனர்.
அரசுப் போக்குவரத்துக் கழக ஊழியர்கள், உயர் அலுவலர்களிடம் இது குறித்து பேசி இன்றே பணம் செலுத்துவதற்கு ஏற்பாடு செய்கிறோம் என்று கூறியும், சுங்கச்சாவடி ஊழியர்கள் ஏற்க மறுத்ததால் இரு தரப்பினருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர், சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர், பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். ஆனால், அதுவும் பலனளிக்காததால் காவல் துறையினர் தாங்களே சுங்கச்சாவடி கேட்டுகளைத் திறந்து அரசு பேருந்துகள் செல்வதற்கு அனுமதித்தனர்.