குறிப்பிட்ட சமூகத்தை பற்றி அவதூறான வசனங்கள் இடம்பெற்றிருந்ததாக் கூறி பாஜக உள்பட 5 அமைப்புகள் "காட்மேன்" வெப்சீரிஸுக்கு தடை விதிக்கக்கோரி சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் புகார் கொடுக்கப்பட்டிருந்தது.
இதையடுத்து, "காட்மேன்" வெப்சீரிஸ் இயக்குநர் பாபு யோகேஸ்வரன், தயாரிப்பாளர் இளங்கோவன் ஆகியோர் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் 6 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர். மேலும் இயக்குநர் பாபு யோகேஸ்வரன், தயாரிப்பாளர் இளங்கோவன் ஆகியோருக்கு சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் சம்மன் கொடுத்தனர்.
அதில், ஜூன் 3ஆம் தேதி காலை 10 மணிக்கு விசாரணைக்காக மத்திய குற்றப்பிரிவு அலுவலகத்தில் ஆஜராகும்படி தெரிவித்து இருந்தனர். ஆனால், சம்மன்படி ஜூன் 3ஆம் தேதி இருவரும் விசாரணைக்காக ஆஜராகவில்லை. இந்நிலையில், மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் இயக்குநர் பாபு யோகேஸ்வரன், தயாரிப்பாளர் இளங்கோவன் ஆகியோருக்கு இரண்டாவது சம்மனை கொடுத்துள்ளனர்.
அதில், வருகிற 6ஆம் தேதி (சனிக்கிழமை) காலை 10 மணிக்கு சென்னை மத்திய குற்றப்பிரிவு அலுவலகத்தில் ஆஜராகும்படி தெரிவித்துள்ளனர். மேலும், 6ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராகாவிட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் எச்சரிக்கையும் விடுத்துள்ளனர்.