திண்டுக்கல் மாவட்டம் தாடிக்கொம்பு அருகே உள்ள அகரம் பேரூராட்சிக்கு உள்பட்ட கஸ்தூரிபா புரம் பகுதியைச் சேர்ந்த சின்னையன் - வெள்ளையம்மாள் தம்பதியர், கால்நடை வளர்ப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
வழக்கம்போல் நேற்று ஆடுகளை மேய்ச்சலுக்கு அழைத்துச் சென்று, பின்னர் மீண்டும் ஆட்டுக் கொட்டகையில் ஆடுகளை அடைத்துள்ளனர். இதையடுத்து அவரது மனைவி உணவு உண்பதற்காக வீட்டுக்கு திரும்பியுள்ளார்.
இதனிடையே ஆட்டுக் கொட்டகை அருகில் இருந்த மின்சார டிரான்ஸ்பார்மரில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக ஆட்டுக்கொட்டகையில் தீ விபத்து ஏற்பட்டது. கொட்டகையைச் சுற்றிலும் காய்ந்த கீற்றுகள் என்பதால், தீ மளமளவென பரவியது. இந்த விபத்தில் 11 ஆடுகள், ஒரு குட்டி உள்பட 12 ஆடுகள் தீயில் கருகி உயிரிழந்தன. மீதமுள்ள 12 ஆடுகள் காப்பாற்றப்பட்டாலும் காயங்களுடன் தவித்து வருகின்றன.
இது குறித்து பேசிய சின்னையன், "நானும் எனது மனைவியும் ஆடு வளர்ப்பை நம்பியுள்ளோம். இது வறண்ட பூமி என்பதால் விவசாயம் இல்லாமல் கால்நடை வளர்ப்பில் ஈடுபட்டுவந்தோம். இவ்வாறான சூழலில் இந்த விபத்து ஏற்பட்டிருப்பது பெரும் வேதனையளிக்கிறது. தீ விபத்து ஏற்பட்டபோது ஆடுகள் கட்டப்பட்டிருந்ததால் தப்பிக்க முடியாமல் தீயிலேயே கருகிவிட்டன.
மேலும் சம்பவத்தன்று காற்றின் வீச்சு அதிகமாக இருந்ததால் தீயை அணைக்க முற்பட்டாலும் அது பயன் தரவில்லை. ஆகையால் எங்கள் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு மாவட்ட நிர்வாகம் எங்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும்" என்ற கோரிக்கையை முன்வைத்தார்.
இது குறித்து பேசிய கிராம நிர்வாக அலுவலர், "விபத்து குறித்த தகவல் அறிந்ததும் பாப்பனம்பட்டி அரசு கால்நடை மருத்துவர் சம்பவ இடத்திற்கு வந்து இறந்த ஆடுகளை ஆய்வு செய்தார். விபத்திலிருந்து தப்பித்த ஆடுகளுக்கும் பரிசோதனை செய்து சிகிச்சை வழங்கப்பட்டுள்ளது.
இதையடுத்து காவல் துறையினர் வழங்கும் முதல் தகவல் அறிக்கையுடன் இந்த விபத்து குறித்து மாவட்ட நிர்வாகத்தின் பேரிடர் மேலாண்மை குழுவிற்கு தெரிவிக்கப்படும். அவர்கள் மூலம் இவர்களுக்கு நிவாரணம் வழங்கப்படும்" என்றார்.