மதுரை மாவட்டம், அவனியாபுரம் அருகே தந்தை பெரியார் நகரில் வசித்து வருபவர் குட்டி (எ) கருப்பையா. இவரது மகன் முத்துச்செல்வம். இவர் அப்பகுதியில் கூலித் தொழில் செய்து வந்தார். இவர் மீது கொலை வழக்குகள் உள்பட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன.
இந்நிலையில், நேற்று முன்தினம் (ஜூன் 21) மாலை வீட்டில் இருந்து தனது இருசக்கர வாகனத்தில் தந்தை பெரியார் நகரில் உள்ள பத்திரகாளியம்மன் கோயிலுக்கு முத்துச்செல்வம் சென்றார். அப்போது, ஆறு பேர் கொண்ட கும்பல் ஆயுதங்களை வைத்து முத்துச்செல்வம் தலையில் பலமாக தாக்கியது.
இதில், நிலை தடுமாறி கீழே விழுந்த முத்துச்செல்வனின் தலையை தனியாக அறுத்து கொடூரமாக கொலை செய்துவிட்டு அந்த கும்பல் தப்பிச் சென்றது. இதைக் கண்ட அவ்வழியாக சென்றவர்கள், இது குறித்து காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவலறிந்து, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அவனியாபுரம் காவல் ஆய்வாளர் பெத்துராஜ், உதவி ஆணையர் ராமலிங்கம் ஆகியோர் முத்துச் செல்வத்தின் உடலைக் கைப்பற்றி உடற்கூறாய்விற்காக அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், கொலை நடந்த இடத்தை காவல் துறையினர் ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
அதில், முத்துச்செல்வனை கொலை செய்தது பழிக்குப் பழியாக நடந்து இருக்கலாம் என தெரிவித்துள்ளனர். இந்நிலையில், இன்று (ஜூன் 23) முத்துச்செல்வம் கொலை வழக்கில் அன்பு, கார்த்தி, பாட்ஷா (எ) சரவணன், முத்துராஜா ஆகிய நால்வரை காவல் துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: பஞ்சர் கடை உரிமையாளர் வெட்டிக்கொலை: குற்றவாளிகளுக்கு போலீஸ் வலை!