உத்தரப் பிரதேசம் மாநிலம் மணிப்பூரி மாவட்டம் தானா பர்னாஹால் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் ஸ்னீஷ், சூரஜ் என்ற சிறுவர்கள். இவர்கள் இருவரும் அருகேயுள்ள பானேபூரி பகுதியில் ஆடு மேய்க்க தனது நண்பர்கள் இருவருடன் சென்றுள்ளனர். அப்போது, ஆடுகள் தண்ணீர் குடிக்க மழைநீர் தேங்கியுள்ள பகுதிக்குச் சென்றன.
இதனால், சிறுவர்களும் அங்கு சென்றபோது நால்வரும் புதைகுழிக்குள் மாட்டிக் கொண்டு நீரில் மூழ்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
மாலை ஆறு மணிக்கு மேல் ஆகியும் சிறுவர்கள் நால்வரும் வீடு திரும்பாததால் பெற்றோர்கள் அதிர்ச்சியடைந்து அவர்களைத் தேடும் பணியில் ஈடுபட்டனர்.
பின்னர் ஸ்னீஷ், சூரஜ் ஆகியோரது காலணிகள் நீரில் மிதந்துகொண்டிருந்தன. இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர்கள் இது குறித்து காவல் துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்துவந்து சிறுவர்கள் நால்வரது உடல்களையும் மீட்டு உடற்கூறாய்விற்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
இது தொடர்பாக வழக்குப்பதிந்து காவல் துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர். மேலும் இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.