நாகை மாவட்டம் மயிலாடுதுறை காவல் நிலையத்தில் சிறப்பு காவல் உதவி ஆய்வாளராகப் பணியாற்றி, 2016ஆம் ஆண்டு ஓய்வுபெற்றவர் சுந்தரமூர்த்தி. இவர் மயிலாடுதுறை டவுன்ஸ்டேஷன் நம்மாழ்வார் தெருவில் வசித்து வருகிறார்.
நம்மாழ்வார் என்ற தெருவின் பெயருக்குப் பொருத்தமாக, இயற்கை விவசாயத்தில் ஆர்வம் கொண்டு ஓய்வு காலத்தில், தன் வீட்டு மாடியில் வீட்டில் 600 சதுரஅடி பரப்பளவில் மாடித்தோட்டம் அமைத்துள்ளார்.
மண்புழு உரம் உள்ளிட்ட இயற்கை உரங்களைத் தானே தயாரித்து தக்காளி, கத்தரிக்காய், பச்சைமிளகாய், வெண்டைக்காய், முள்ளங்கி, கீரை வகைகளான புதினா, முளைக்கீரை, வல்லாரை, மணத்தக்காளி, கொத்தமல்லி போன்ற அன்றாட தேவைக்குரிய காய்கறிகளை உற்பத்தி செய்துவருகிறார்.
மேலும், மலைப்பிரதேசங்களில் விளையக்கூடிய உருளை, சௌசௌ, பீட்ரூட், நூல்கோல் போன்ற காய்கறிகளையும் உற்பத்தி செய்து நஞ்சில்லா உணவை உண்பதாகவும் உறவினர்களுக்கு கொடுத்து மகிழ்ச்சியடைவதாகவும் கூறுகிறார்.
இவர் ரோஜா, மல்லி, செம்பருத்தி உள்ளிட்ட பூக்களையும் வளர்த்து வருகிறார். வீட்டில் உபயோகப்படுத்திய பால் பாக்கெட்டுகள், குப்பையில் எரியக்கூடிய பொருள்களைக் கொண்டு குறைந்த செலவில் மாடித்தோட்டம் அமைக்கமுடியும் என்றும் தினந்தோறும் காலை, மாலை என 1 மணி நேரம் வேலை செய்தால் உடல் ஆரோக்கியமாகவும், புத்துணர்ச்சியுடனும் செயல்படலாம் என்கிறார்.
மேலும் பூமி வெப்பமயமாதலைத் தடுக்கும் வகையில் பசுமை பரப்புக, அறம்செய் என்ற தன்னார்வ இயக்கங்கள் மூலம் மண்வளத்தையும் நீராதாரத்தையும் காப்பதற்காக சாலை ஓரங்கள், பள்ளிக்கூடங்கள், ஆற்று ஓரங்களில் பனை, தேக்கு, நாவல் உள்ளிட்ட 500க்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை நட்டுவைப்பதோடு மட்டுமல்லாமல், கூண்டு வைத்து பாதுகாப்பாக வளர்த்து வருகிறார்.
மேலும் மரம் நடுவோம், மழைபெறுவோம் என்பதை வலியுறுத்தி தன்னார்வ இளைஞர்களுக்கு இலவசமாக மரக்கன்றுகளை வழங்கி, ஊக்கப்படுத்தி வருகிறார். இந்த ஓய்வுபெற்ற காவல் சிறப்பு உதவி ஆய்வாளரின் சேவை தன்னார்வ இளைஞர்களின் பாராட்டைப் பெற்று வருகிறது. இவரின் மாடித்தோட்டத்தை தங்கள் வீடுகளில் அமைப்பதற்காக, ஏராளமானோர் இவரிடம் ஆலோசனைகள் கேட்டுவருகின்றனர்.