சென்னை, தேனாம்பேட்டை, தி நகர் உள்ளிட்ட பகுதிகளில் பொது மக்களுக்கு கபசுரக் குடிநீர், முகக்கவசங்கள் உள்ளிட்டவற்றை உணவுத் துறை அமைச்சர் காமராஜ் வழங்கினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் "சென்னையில் கடந்த எட்டாம் தேதி 50.4 சதவீதம் பேர் கரோனாவிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தற்போது சென்னையில் குணமடைந்து இருப்பவர்கள் 60.48 சதவீதமாக உயர்ந்துள்ளனர்.
35 சதவீதம் பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். விரைவில் அவர்களும் மீண்டு வருவர். தினந்தோறும் 4000 பேர் காய்ச்சல் தொடர்பான பரிசோதனைகளை மேற்கொள்கிறார்கள். அவர்களில் 400 பேர் கரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்படுகிறார்கள்.
தமிழ்நாட்டைப் பொருத்தவரையில் உணவுப் பொருட்கள் கையிருப்பில் உள்ளன. சாத்தான்குளம் விவகாரம் சிபிஐயிடம் ஒப்படைக்கப்படும் என முதலமைச்சர் கூறி விட்டார். எனவே அது பற்றி பேசுவதற்கு ஒன்றுமில்லை” எனத் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், “கரோனா பரிசோதனை முடிவுகள் தவறாக அறிவிக்கப்படுகின்றன என்பது தவறான தகவல். அப்படி நடக்க வாய்ப்பில்லை. ஆயிரம் ரூபாய் நிவாரணத் தொகையை வீடுகளுக்கு சென்று வழங்க வேண்டும் என ஏற்கனவே கூறப்பட்டிருக்கிறது.
சென்னையில் 90 சதவீதம் வீடுகளுக்கு நேரடியாகச் சென்று நிவாரணத் தொகை வழங்கப்பட்டுள்ளது. இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் தான் இலவச ரேஷன் பொருட்கள் வழங்கப்படுகின்றன” என்றும் அவர் தெரிவித்தார்.
இதையும் படிங்க : வாடகை கேட்கும் வீட்டு உரிமையாளர்கள், திணறும் குடியிருப்போர் : காற்றில் பறந்த அரசு உத்தரவு!