டெல்லி: பயனர்களின் வசதிக்காக ஃபிளிப்கார்ட், ஒலி உதவியாளர் (Voice Assistant) மூலம் ஆர்டர்களை செய்யும் வண்ணம் புதிய வசதியை, தனது செயலியில் அறிமுகம் செய்துள்ளது.
ஃபிளிப்கார்ட் இணையப் பல்பொருள் அங்காடியான 'சூப்பர் மார்ட்' பயனர்களின் வசதிக்காக ஒலி உதவியாளர் சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன்மூலம் குரல் ஒலியைக் கொண்டு பயனர்கள், ஆர்டர்களைப் பதிவுசெய்ய முடியும். முதலில் ஆங்கிலம், இந்தி ஆகிய இரு மொழிகளில், இந்த வசதியைப் பயனர்களுக்கு ஃபிளிப்கார்ட் அளிக்கிறது.
இந்த அம்சமானது, பல பரிணாமங்களில் மனிதர்களின் ஒலி அமைப்புடன் செயல்பட்டு, அவர்கள் நினைப்பதை, அவ்வண்ணமே செயல்படுத்தும் ஆற்றலைக் கொண்டுள்ளது என ஃபிளிப்கார்ட் நிறுவனத்தின் அலுவலர் தெரிவித்துள்ளார்.
இந்தி, ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளில் முதலாவதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த அம்சமானது, ஆன்ட்ராய்டு பயனர்களுக்கு மட்டும் திறன்பேசி செயலிகள் மூலம் கிடைக்கும் என்றும், ஆப்பிள் ஐஓஎஸ் மற்றும் கணினி வலைதளங்களுக்கு விரைவில் இந்த அம்சமானது நிறுவப்படும் எனவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.