திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் அடுத்த சிரணியம் கிராமத்தில், சென்னையைச் சேர்ந்த இளங்கோ என்பவருக்குச் சொந்தமான காகித தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இங்கு வெளிநாடுகளிலிருந்து வீட்டு அலங்கார காகிதங்களை கொள்முதல் செய்து தரம் வாரியாகப் பிரித்து, தமிழ்நாடு முழுவதும் விநியோகம் செய்யப்பட்டு வந்தது.
இந்நிலையில் இன்று அதிகாலை 3 மணியளவில் திடீரென காகித ஆலையிலிருந்து புகை வெளியேறுவதைக் கண்ட அப்பகுதிவாசிகள் தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வருவதற்கு முன்பாக மளமளவென பரவிய தீயால் அங்கு அடுக்கி வைக்கப்பட்டிருந்த விலை உயர்ந்த காகித பண்டல்கள் பற்றி எரியத் தொடங்கின.
பின்னர் செங்குன்றம், மாதவரம், மணலி, அம்பத்தூர் ஆகியப் பகுதிகளில் இருந்து 10-க்கும் மேற்பட்ட வாகனங்களில் வந்த அதிநவீன தீயணைப்பு வாகனத்தின் உதவியோடு, தீயைக் கட்டுப்படுத்துவதற்காக ஜேசிபி இயந்திரத்தைப் பயன்படுத்தி, கட்டடத்தின் ஒவ்வொரு பகுதியிலும் துளையிட்டு, அதன் வழியாக தண்ணீரைப் பீய்ச்சி அடித்து, 10 மணி நேரமாகப் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இதனிடையே சம்பவ இடத்திற்கு நேரில் வந்த தமிழ்நாடு தீயணைப்புத் துறை இயக்குநர் சைலேந்திரபாபு, தீயைக் கட்டுப்படுத்தும் வழிமுறைகள் குறித்து வீரர்களுக்கு ஆலோசனை வழங்கினார். மேலும் ராட்சச ஸ்கை லிஃப்ட் வாகனம் மூலம் தீயை அணைக்கும் பணியை, நேரில் பார்வையிட்டு தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டார். நூறு பேர் இப்பணியில் ஈடுபட்டதால், தீ விரைவில் அணைக்கப்பட்டது.
இந்த தீ விபத்தில் சுமார் 18 கோடி ரூபாய் மதிப்புள்ள இயந்திரங்கள் உள்ளிட்ட பொருட்கள் எரிந்து நாசமானது தொடர்பாக சோழவரம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். நல்வாய்ப்பாக நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால், தொழிலாளர்கள் யாரும் தொழிற்சாலைக்குள் இரவுப் பணியில் ஈடுபடவில்லை. எனவே, உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது.
தீயணைப்புத்துறை தலைவர் சைலேந்திர பாபு, ராட்சச ஸ்கைலிப்ட் வாகனம் மூலம் தீயை அணைக்கும் பணியை நேரில் பார்வையிட்டு செயல்பட்டது குறிப்பிடத்தக்கது.