காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட குண்டுபெரும்பேடு ஊராட்சியில் சுமார் 350 ஏக்கர் பரப்பளவில் ஏரி உள்ளது. இதன் மூலம் அப்பகுதியில் உள்ள ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பயன்படுவதுடன், குடிநீர் ஆதாரமாகவும் இது விளங்கிவருகிறது. பல ஆண்டுகளாக இந்த ஏரியை தூர்வாரததால் ஆண்டுதோறும் மழைக்காலங்களில் பல லட்சம் லிட்டர் தண்ணீர் விணாக வெளியே செல்கிறது.
இந்நிலையில் குண்டுப்பெரும்பேடு ஏரியை குடிமாரத்து பணியில் சீரமைக்க 90 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்காக உள்ளூர் விவசாயிகள் மூலம் சங்கம் அமைக்கப்பட்டு அதன் மூலம் குடிமாரத்து பணி மேற்கொள்ளப்படும் என பொதுப்பணித் துறை அலுவலர்கள் தெரிவித்தனர்.
ஆனால், திடீரென கிராம விவசாயிகள் அமைத்த விவசாயி சங்கத்தை ரத்து செய்துவிட்டு, ஆளும் கட்சியைச் சேர்ந்த நபர்களுக்கு குடிமராமத்து பணியை வழங்கியதாக கூறப்படுகிறது. இதனால், ஆத்திரமடைந்த உள்ளூர் விவசாயிகள் ஏரி மதில் மீது நின்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இது குறித்து அப்பகுதி விவசாயிகள் கூறுகையில், “கடந்த ஆண்டு குண்டுபெரும்பேடு பகுதியிலுள்ள காரணைதாங்கல் ஏரியில் குடிமராமத்து பணிகளை செய்யாமல், பல லட்சம் ரூபாய் மோசடி செய்தனர். தற்போது ஏரி பணியையும் அவர்களிடம் வழங்கினால், எந்தவொரு பணியும் நடக்காமல், ஒதுக்கப்பட்ட நிதியை கையாடல் செய்துவிடுவார்கள்” எனக் குற்றஞ்சாட்டினர்.
குடிமாரத்து பணியை அந்த கிராமத்தில் உள்ள விவசாயிகள் சங்கம் அமைத்து, அதன் மூலம் பணியை நடத்தவேண்டும் என்ற உத்தரவு உள்ளது. ஆனால், ஸ்ரீபெரும்புதூர் பொதுப்பணித் துறை அலுவலர்கள் முறைகேடு செய்து அதிமுக பிரமுகர்களுக்கு பணியை வழங்கியுள்ளனர்.
உள்ளூர் விவசாயிகள் மேற்பார்வையில் குடிமராமத்து பணி நடந்தால்தான் கரையை எப்படி பலப்படுத்த வேண்டும், கலங்கல் எப்படி அமைக்க வேண்டும் என்பது தெரியும். அதுமட்டுமல்லாமல், தற்போது இரண்டு போகம் விலையும் பயிர்கள், மூன்று போகம் விலையும். எனவே மாவட்ட நிர்வாகம் உடனடியாக இது குறித்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என விவசாயிகள் கோரிக்கைவைத்தனர்.
மேலும், உள்ளூர் விவசாயிகளை மீறி குடிமராமத்து பணி நடைபெற்றால், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபடுவோம் எனவும் எச்சரித்துள்ளனர்.
இதையும் படிங்க: கரூரில் குடிமராமத்து திட்ட பணி தொடக்கம்