ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் அருகே அமைந்துள்ள புதூர் வனப்பகுதியில் ஏராளமான கரடிகள் வசித்து வருகின்றன. இந்த வனப்பகுதியிலிருந்து ஊருக்குள் புகும் கரடிகளின் அட்டகாசத்தைத் தாங்கமுடியாமல் பொதுமக்கள் தினந்தோறும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
இந்நிலையில், இன்று புதுக்குய்யனூரைச் சேர்ந்த விவசாயி நாகராஜ் என்பவரைப் புதர் மறைவில் ஒளிந்திருந்த இரு கரடிகள் தாக்க முற்பட்டுள்ளன. அப்போது, கையில் வைத்திருந்தத் தடியைக் கொண்டு கரடிகளை நாகராஜ் விரட்டிய நிலையில், ஒரு கரடி ஓடிவிட்டது. ஆனால், மற்றொரு கரடி அவரைத் தாக்கியதில் அவர் படுகாயமடைந்தார்.
இச்சம்பவத்தைப் பார்த்த கிராம மக்கள், அவரை மீட்டு சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதற்கிடையே, தினந்தோறும் அட்டகாசம் செய்யும் இக்கரடிகளை வனத்துறையினர் பிடித்து அடர்ந்த காட்டுப்பகுதியில் விட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.