விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் கிசான் திட்டத்தின் கீழ் கடந்த 2019 ஆம் ஆண்டு மத்திய அரசு விவசாயிகளுக்கு மூன்று தவணைகளாக தலா 2 ஆயிரம் வீதம் ஆண்டுக்கு 6 ஆயிரம் ரூபாய் வழங்கி வருகிறது.
இத்திட்டத்தில் குடும்பத்தில் ஒருவர் மட்டுமே பயனாளிகளாக தேர்வு செய்யப்பட்டு பயனாளிகளின் ஆதார் எண், வங்கி கணக்கு எண் மற்றும் சிட்டா ஆகிய ஆவணங்களை வருவாய் துறையினர் பெற்று வேளாண்துறை அலுவலர்களிடம் வழங்குவர்.
அவர்கள் அதனை சரிபார்த்து பயனாளிகளை கிசான் திட்டத்தில் இணைக்கப்படுவர்.
இந்நிலையில், தமிழ்நாட்டில் பல மாவட்டங்களில் பிரதமரின் கிசான் திட்டத்தில் தகுதியில்லாத பலர் முறைகேடாக இணைக்கப்பட்டு உதவித்தொகை பெறுவது கண்டறியப்பட்டது.
இதையடுத்து, தமிழ்நாடு முழுவதும் முறைகேடுகள் குறித்து விசாரணை நடைபெற்று வருகின்றது.
இதன் கீழ் நாமக்கல் மாவட்டத்தில் நடைபெற்றுள்ள முறைகேடுகள் குறித்து விவசாயிகள் வழங்கிய ஆவணங்களின் நகல்களை வருவாய்த்துறையினர் உதவியுடன் அலுவலர்கள் சரிபார்த்து வருகின்றனர்.
இது குறித்து மாவட்ட ஆட்சியர் மேகராஜ் கூறுகையில், "இதுவரை 570 போலி கணக்குகள் மூலம் முறைகேடுகள் நடைப்பெற்றுள்ளது கண்டறியப்பட்டு, அந்த வங்கி கணக்குகள் முடக்கப்பட்டு அதிலிருந்து 23 லட்ச ரூபாய் திரும்ப பெறப்பட்டுள்ளது.
தொடர்ந்து விசாரணை நடைப்பெற்று வருகிறது. இரண்டு நாள்களில் முழுமையான விசாரணை முடிவடையும்" எனத் தெரிவித்தார்.